பக்கம் எண் :

பரிபாடல்- வையை 335

பதிந்து நிற்கத் தக்கது என்பாள் மனத்தக்க நோய் இது என்று
தனக்குள்ளே கூறிக்கொண்டாள் என்க. வேற்றார் - பகைவர். இளி
வரவு - இழிவு. போற்றாய் - அறிந்திலை. புரையோய் - உயர்ந்தோய்.
"புரை உயர்வாகும்" (உரி - 4) என்பது தொல்காப்பியம். புரையோய்
என்றது, அவ் விழிவினை அறியாமைக்குக் குறிப்பேதுவாய் நின்றது.
என்னை? சிறியன சிந்தியாமை சான்றோர் இயல்பாகலின்:
அச் சான்றாண்மையுடைமையின் இதன்கண் உள்ள இழிவினை நீ
அறிந்தாயில்லை என்பது அவள் கருத்தாகலின். 'புரையின்று' என்றது,
இளிவரவுடைத்தென்றபடியாம். வரவு - வழிபாடு. மாற்றாள் - தன்
காதலனுடைய காதலியாகிய மற்றொருத்தி.

(பரிமே.) மேல் தலைவி:

74 - 78: அ...சொல் . . . . . . . . தருக்கு


      (இ - ள்.) நல்லவை அ. . . . . . சொல் நாணாமல் தந்து
முழவின் வருவாய் நீ - நல்லனவாகிய மெல்லிய இனிய சொற்களை
நாணமின்றிப் பல அவையிடத்தும் சொல்லிக் கூத்தாடுதற்கு
மத்தளத்துடனே வருமியல்புடைய நீ, வாய் வாளா - நினது
பெருமையை எடுத்துக் கூறவேண்டா அது கிடக்க, எந்தை எனக்கு
ஈத்த இடுவளை ஆரம் பூண் நின்பால் வந்த வழி மாயக் களவு
அன்றேல் - எம் தந்தை எமக்குச் சீதனமாக வழங்கிய இடப்படும்
கைவளையலும் முத்துமாலையும் ஆகிய இவ்வணிகலன்கள்
எம்மிடத்தினின்று நின்னிடத்திற்கு வந்தவழி வஞ்சனையுடைய களவு
வழி இல்லை என்பாயாயின், தந்தானைத் தந்து தருக்கு - இவற்றை
நினக்குத் தந்தவன் ஒருவன் உளனாதல் வேண்டுமன்றே அவனை
எமக்குக் கூறிப் பின்னர் நீ மேம்பாடுடையை ஆயின் ஆகுக;

      (வி - ம்.) 74 ஆம் அடியில் சில சொற்களின் முன்னும் பின்னும்
ஒவ்வோர் எழுத்து நிற்ப ஏனைய எழுத்துக்கள் அழிந்தொழிந்தன;
அவை: 'பல அவையிடத்தும் மெல்லிய இனிய' என்னும் பொருளுடை
யனவாக இருத்தல் வேண்டும் என்பது பரிமேலழகர் உரையால்
விளங்கும். நல்லவை - நன்மை தருவன. நல்லனவாகிய சொல்
என்றது காதலிருவர் தனியிடத்தேயிருந்து உரையாடுங்கால் இன்பந்
தருவனவாகிய சொற்கள் என்றவாறு. அவற்றைப் பல்லோரவைக் கண்
சொல்ல மகளிர் நாணுவர். அத்தகைய சொல்லை நீ நாணாது பலர்முன்
சொல்லி ஆடுவாய் என்றவாறு. முழவு - மத்தளம். தலைமை பற்றி
முழவொடு வருவாய் என்றாளாகலின் முழவு முதலிய இசைக்
கருவிகளோடும் வருவாய் என்பது கருத்தாகக் கொள்க. முழவு -
மத்தளம். இஃது இசைக் கருவிகளிற் றலைசிறந்தது என்பதனை,

      "இவை அகமுழவு. அகப்புற முழவு, புற முழவு, புறப்புற முழவு,
பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவென எழுவகைப்படும்.

      அவற்றுள் அக முழவாவன முன்சொன்ன உத்தமமான மத்தளம்
சல்லிகை இடக்கை கரடிகை பேரிகை படகம் குடமுழா என இவை.