பக்கம் எண் :

பரிபாடல்- வையை361

17 - 25: துவர்புகை. . . . . . . நெறிபீண்டி

      (இ - ள்.) துவர் புகை சாந்தம் - பத்துவகைத்துவரானும்
ஆக்கப்பட்ட நீரும் அகில் முதலிய நறுமணப்புகைக்குரிய பொருள்களும்
சந்தனம் குங்கும முதலியவற்றின் குழம்பும் ஆகிய மணப்
பொருள்களையும், எறிவன எக்குவன ஈரணிக்கு ஏற்ற - வீசுவனவும்
பிலிற்றுவனவும் ஆகிய நீராடற்கு ஏற்ற கருவிகளையும், நன்பல பிற
நறவு அணி பூந்துகில் ஏந்தித் தொழில். . . நன்மைமிக்க பல
பிறபொருள்களையும் கள்ளும் அணிகலன்களும் பூத்தொழிலுடைய
துகில்களும் ஆகியவற்றையும் பணி (மைந்தரும் மகளிரும்) ஏந்தி, பின்
பின் தொடர - தத்தமக்குப் பின்னே பின்னே தொடர்ந்து வாரா நிற்ப,
செறிவினைப் பொலிந்த செம்பூங் கண்ணியர் - செறிந்த தொடுத்தற்
றொழிலாலே பொலிவுற்ற சிவந்த மலர் மாலைகளை அணிந்தோரும்,
ஈர் அமை வெட்சி இதழ்புனை கோதையர் - குளிர்ச்சி பொருந்திய
வெட்சிமலராலே தொடுக்கப்பட்ட மாலையினை அணிந்தோரும், தார்
ஆர் முடியர் - மாலை பொருந்திய முடியினை யுடையோரும், தகைகெழு
மார்பினர் - அழகு பொருந்திய மார்பினையுடையோரும் ஆகிய
மதுரையிலுள்ள மைந்தரும் மகளிரும், மணி அணி மாவும் களிறும்
வேசரி - மணி முதலியவற்றாலே ஒப்பனை செய்யப்பட்ட குதிரையும்
யானையும் கோவேறு கழுதையும் ஆகிய இன்னோரன்ன ஊர்திகளில்
ஏறி ஊர்ந்து, கரை நெரிபு காவு நிறைய ஈண்டி - வையையாற்றினது
கரை நெரியும்படி வந்து பொழில்களின் கண்புக்கு நிரம்ப;

      (வி-ம்.) துவர் - பத்துவகைத் துவரால் இயற்றிய மணநீர். புகை;
ஆகுபெயர்; அகில் சந்தனம் குங்குலியம் முதலியன. எறிவன - அரக்கு
நீர் வட்டு முதலியன. எக்குதல் - பிலிற்றுவித்தல். எக்குவன -
எக்குதற்குரிய மூங்கிற்சிவிறிகள்: துருத்திகள்; ஈரணி - ஈர அணி.
ஆகுபெயரால் நீராடலைக்குறித்து நின்றது. ஈரணிக் கேற்ற நன்பல
என்னும் தொடர் எறிவனமுதல் பூந்துகில் ஈறாகவுள்ள அனைத்திற்கும்
பொது. இவற்றைப் பணியாளர் ஏந்தித் தத்தம் பின்னே பின்னே தொடர
முற்பட்டு என்க. இதனால் அம் மைந்தர் மகளிர்களின் நீராடல் விருப்பம்
தெரித்தோதப்பட்டது.

      செறிவினை - மலரைச் செறிய வைத்துத் தொடுக்குந் தொழில்.
செம்பூ - சிவந்த பூ. செம்பூங்கண்ணி - மைந்தர்க்கும் மகளிர்க்கும்
பொது. கோதையர் என்றது, மகளிரை. தாரார்முடியர், மார்பினர் என்றது,
மைந்தரை. எனவே இருபாலாரும் மா முதலியவற்றை ஊர்ந்து,
காவின்கண் நிறைய என்பதாயிற்று. மா - குதிரை. தலைமை பற்றிக்
களிறு என்றாரேனும் பிடியானையும் கொள்க. மணியணி மாவும் களிறும்
வேசரியும் என மாறுக. வேசரியும் எனற்பாலதாகிய உம்மை - செய்யுள்
விகாரத்தால் தொக்கது. வேசரி - கோவேறுகழுதை. காவு, கா;
பூம்பொழில். நெரிபு - நெரிய.