பக்கம் எண் :

பரிபாடல்- வையை364

நல் யாழ் இமிழ் - கேட்போர் உள்ளம் கவரும் இயல்புடைய
பாலைப்பண்ணைக் கோவையையுடைய நல்ல யாழ் இசையா நிற்ப
அவ் விசைக்கு மாறாக, பூஞ்சினை புகர் வரி வண்டு இனம் இமிர
- பூத்த மரக்கொம்புகளிலே புள்ளிகளையும், வரிகளையும் உடைய
வண்டுக் கூட்டங்கள் இசைபாடாநிற்பவும், ஊதுசீர்த் தீங்குழல் இயம்ப
- இசைவாணர்களாலே ஊதப்படுகின்ற. இனிய இசையையுடைய
வேய்ங்குழல் ஒலியாநிற்ப அதற்கு மாறாக, மலர்மிசைத் தாது ஊது
தும்பி தவிர்பல இயம்ப - மலர்களின் மேலே மகரந்தத்தை ஊதா
நின்ற தும்பிகள் ஒழியாதனவாய் ஒலியா நிற்பவும், . . . . .துடிச்சீர்
நடத்த - (ஆடன் மகளிர்) துடியினது தாளத்திற்கேற்ப (கூத்தாடுதலை)
நிகழ்த்தாநிற்ப அதற்கு மாறாக, வளிநடன் மெல்லிணர்ப் பூங்கொடி
மேவர நுடங்க - காற்றாகிய கூத்தன் (நட்டுவன்) மெல்லிய
கொத்துக்களையுடைய மலர்க்கொடியைக் கண்டோர்க்கு விருப்பம்
வருமாறு ஆடச் செய்யவும், ஆங்கு அவை தத்தம் தொழில்
மாறுகொள்ளும் - அவ்விடத்துள்ள அக்கலைகள் ஒவ்வொன்றும்
தத்தம் தொழிலுக்கு மாறாய தொவ்வொன்றினைக் கொள்ளா நிற்கும்.

      (வி - ம்.) திருமருத முன்றுறையின்கண் இசை கூத்து ஆகிய
கலைகள் தத்தமக்கு மாறாயவற்றைக் கொள்ளாநிற்கும் என்பதாம்.

      மண் கணை முழவம் - மண்ணாலாய திரண்ட குடமுழா என்க.
இது பிங்கல நிகண்டிற் கண்டது. இனி, மார்ச்சனையையுடைய முழவுமாம்.

      முழவிற்கு மாறாக இடியேறு முழங்கும், யாழிசைக்கு மாறாக
வண்டினம் இமிரும், குழலிசைக்கு மாறாகத் தும்பி இயம்பும், விறலியர்
ஆட்டத்திற்கு மாறாக வளிநடன் பூங்கொடியை ஆடச்செய்வன்,
இவ்வாற்றால் இக் கலைத் தொழில்கள் தத்தமக்கு மாறு கொள்ளும் என்க.

      எனவே, திருமருதந்துறையில் இயற்கையின்பமும்,
செயற்கையின்பமும் செறிந்து திகழும் என்றவாறாம்.

      இன்கண் - முழவினது காண்டற்கினிய கண். இமிழ்வு - முழக்கம்
37 ஆம் அடிக்கண் அழிந்த சொற்கள் விண்ணின்கண் முகில்கள்
என்னும் பொருளுடையன போலும். கவர்தொடை - விரும்பப்படும்
பாலைக் கோவை. புகர்வரி வண்டினம் - புள்ளிகளையும்
வரிகளையுமுடைய வண்டுத்திரள். தவிர்பல - ஒழியாதனவாய்.
இயம்ப - பாட. துடிச்சீருக்கு இயைய விறலியர் ஆட என்க. வளிநடன்
- காற்றாகிய ஆடலாசிரியன். நுடக்குதலால் பூங்கொடி நுடங்க என்க.
தீம்புனல் காண்டற்கும் ஆடற்கும் உண்ணற்கும் இனிய நீர் என்க.
துறைமுன் எனற்பாலது முன்றுறை என மாறித் தொக்கது.
முன்றுறையால் என்புழி மூன்றாவது ஏழாவதன் பொருட்டாய் மயங்கிற்று.