விழுப்பயன் துய்த்தலைப் பொருட்கேற்றி,
திருவடி தொழுது விழுமிய
இன்பம் நுகர்தற்கு இடனாகலான் என்க.
துறக்கம் - அறஞ்செய்தோர் எய்தும் மேனிலையுலகம்.
கேழ் -
நிறம். உத்தி - பாம்பினது படத்தின்கட் பொறி இருகேழுத்தி அணிந்த
செல்வன் என்றது ஆதிசேடனை. ஆதிசேடன் திருமாலின் அம்சம்
ஆதலானும் திருமாலின் அறிதுயிற் பாயலாதலானும் ஆதிசேடனையும்
வைணவர் வணங்குதல் வழக்கம்.
50-59: வண்டொடு . . . . .. . . நாகர் நகர்
(இ - ள்.) புனையிழைப் பூ முடி நாகர் நகர் - ஒப்பனை
செய்யப்பட்ட அணிகலன்களையும் நிலமகளையும் திருமுடியின்கண்
கொண்டுள்ள அந்த ஆதிசேடனார் திருக்கோயிலின்கண், வண்டொடு
தும்பியும் வண்தொடை யாழ் ஆர்ப்ப - வண்டினங்களும்
தும்பியினங்களும் வளவிய நரம்புத் தொடையினையுடைய யாழினோடு
ஒத்து இசை முரலாநிற்பவும், விண்ட கடகரி மேகமோடு அதிர -
பிளிறாநின்ற மதயானை முகில் முழக்கத்தோடே ஒத்து முழங்காநிற்பவும்,
இருமுழவு தண்டா அருவியோடு ஆர்ப்ப - பெரிய மத்தளம் அமையாத
அருவி முழக்கத்தோடே ஒத்து முழங்காநிற்பவும், அரி உண்ட
கண்ணாரோடு ஆடவர் கூடி புரிவுண்ட பாடலும் ஆடலும் தோன்ற -
செவ்வரி கருவரி படர்ந்த மை தீட்டப்பட்ட கண்களையுடைய விறலியரும்
கூத்தரும் கூடி யாவரானும் விரும்பப்பட்ட பாட்டினையும் கூத்தினையும்
தோன்றுவியாநிற்பவும், சூடும் நறவொடு காமம் முகில் விரிய -
சூடுதற்குரிய நறவமொட்டோடே அதனைச் சூடிய மைந்தர் மகளிரின்
காமப்பண்பும் அரும்பி மலராநிற்பவும், சூடா நறவொடு காமம் விரும்ப
- அம் மைந்தரும் மகளிரும் கள்ளினோடே காமவின்பத்தையும்
விரும்பாநிற்பவும், இனைய பிறவும் இவை போல்வனவும் - இவையும்
இன்னோரன்ன பிற நிகழ்ச்சிகளுமாகிய, அனையவை எல்லாம் -
அவையெல்லாம், இயையும் தம்முள் பொருந்தாநிற்கும்;
(வி-ம்.) புனையிழைப் பூமுடி நாகர் நகரின்கண் வண்டும்
தும்பியும்
யாழோடு இயைந்து முரலும். யானை முகிலோடியைந்து முழங்கும். முழவு
அருவியோடு இயைந்து முழங்கும். கண்ணாரோடு ஆடவர் இயைந்து
ஆடலும் பாடலும் நிகழ்த்துவர். நறவ மொட்டொடு அதனைச் சூடிய
மைந்தர் மகளிரது காமக்குணம் இயைந்து மலரும். அம் மகளிரும்
மைந்தரும் கள்ளோடே இயையக் காமவின்பத்தையும் விரும்பாநிற்பர்.
இவ்வாறாக ஆண்டுப் படும் நிகழ்ச்சிகள் ஒன்றனோடு ஒன்று
இயைவதாம் என்றவாறு.
தும்பி - வண்டின் வகையினுள் ஒன்று. வண் தொடை யாழ்
-
வளப்ப முடைய நரம்பு தொடுத்தலையுடைய யாழ் என்க. நரம்பிற்கு
வளமாவது, இன்னிசைத்தாதலென்க. விண்ட - பிளிறிய. விள்ளுதல்
என்னும் வினையடியாகப் பிறந்த பெயரெச்சம். விள்ளுதல். |
|
|
|