இரண்டாம் பாடல்
---------
வையை
பொருட் சுருக்கம்:
இப் பாடல் தலைவன் பரத்தையரோடு வையையின்கண்
நீராடினான் எனக் கேட்ட தலைமகள் ஊடியிருந்தாளாக, அவள்
ஊடலைத் தீர்க்கும் பொருட்டுத் தலைவன் தோழியை வாயில்
வேண்டினன். அத் தலைவனுக்குத் தோழி வையை நீரணியும்
ஆண்டுப்பட்ட செய்தியும் கூறி வாயில் மறுப்பாள். கூற்றாக
அமைந்துளது.
1 - 27: பெரிய நிலம் காணப்படாதபடி மழை பொழிந்தமையாலே
வையையாற்றில் வெள்ளம் பெருகி மதுரையை விரைந்து எய்தியது.
அந்நீர் வருகையினைக் கேட்ட மதுரை மாந்தர் தம்மை அணி
செய்துகொண்டு குதிரை தேர் முதலிய ஊர்திகளில் ஏறி வையை
நோக்கிச் சென்றனர். அவர்கள் ஊடுவாரும் ஊடலொழிப்பாரும்
உணர்வாரும் ஆடுவாரும் பாடுவாரும் நகைப்பாரும் ஓடுவாரும்
ஆகிச் சென்றனர். இவ்வாறு கற்றாரும் கல்லாதவரும் கயவரும்
மக்கட்பெற்ற சான்றோரும் கற்புடை மகளிரும் பாண்டிய மன்னன்
உட்பட மதுரையிலுள்ளோர் எல்லோரும் வையையை எய்தினர்.
28 - 63: வையையின்கண் மகளிரும் மைந்தரும் பலவாறாக
நீராட்டயர்ந்தனர். அவர்கள் அணிந்திருந்த மாலைகளும்
மணப்பொருள்களும் அந் நீரிற் கலந்தமையால் அந் நீர்
தூய்மையற்றதாயிற்று. அந்தணர் அந் நீரில் ஆடாது அகன்றனர்.
64 - 84: அம் மதுரை மாந்தர் திருமருத முன்றுறையை
அடைந்து நீராடினர். பாணர் மருதப்பண் பாடினர். அவர்கள்
பாடப்பாடத் தாமும் பாடிக் கொண்டும் ஊடியும் உணர்ந்தும்
கூடியும் சிதைந்தும் சூடியும் தொழுதும் அம் மக்கள் நீராடினர்.
அந்நீர் அம்மக்கள் அணிந்த சந்தனமும் மாலைகளும் மலர்களும்
நெகிழ்ந்து நிறைந்தமையாலே தன்னிறம் தோன்றாது மறைந்தது.
85-96. இவ்வாறு பாண்டியன் மதுரை மக்களொடு வையையில்
நீராடியது இந்திரன் தேவர்களொடு ஆகாய கங்கையில்
நீராடியதனையே ஒத்திருந்தது. |
|
|
|