கண்ணிறை நெடுநீர் சுரந்தனள் அடக்கி
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென"
(சிலப்.13; 172-5)
என்றார் இளங்கோவும்.
விரைஇ - மணந்து. காமரு - காமம் வரும் என்பது விகாரத்தால்,
காமரு என நின்று கண்டார்க்கு விருப்பம் வரும் என்றாயிற்று.
வையையின்கட் பெருகிய வெள்ளம் கடுகின்று என்க. கூடல் - மதுரை.
5 - 10: நீரணி . . . . . . . இயல்
(இ-ள்.) வையை நீர் அணி கொண்டன்று என - வையை
யாறு
புதுநீர் வருகையாலே பொலிவுற்றது என்று கண்டோர் கூறக்கேட்ட, ஊர்
விரும்பி - அம் மதுரையிலுள்ள மாந்தரெல்லாம் அப் புதுநீர்
ஆடலின்பத்தை விரும்பி, தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி
- தூசிப்படையினது தன்மையை மேற்கொண்டதொரு மகிழ்ச்சி
எய்தப்பெற்று, ஒருவர் ஒருவரின் - ஒவ்வொருவரும், அணிசேர்
அணி கோலம்கொண்டு தத்தம் இயற்கை அழகிற்குப் பொருந்திய
ஒப்பனைகளானும் அழகு செய்துகொண்டு, நிறம் ஒன்று நீர் அணி
கொண்ட நிறை அங்காடி - நன்னிறம் பொருந்திய பல்வேறு
வகைப்பட்ட நீராட்டிற்குரிய நெட்டி முதலியவற்றாற் செய்த அழகுப்
பொருள்கள் கொண்ட நிறைந்த நீரங்காடியினும் சென்று, இயல் ஏர்
அணி கொண்டார் - தமது இயற்கையழகினை ஆண்டுள்ள
பொருள்களானும் அழகு செய்து கொள்வாராயினர்.
(வி - ம்.) நீர் அணி கொண்டன்று - நீரானே அழகுற்றது.
கொண்டன்று - கொண்டது. என - என்று கண்டோர் கூற என்க. ஊர்
விரும்பி எனக் கூட்டுக. ஊர் - ஆகுபெயர். அம் மதுரையிலுள்ளோர்
என்க. தாரணி - இருபெயரொட்டு. தாராகிய அணி என்க. அஃதாவது
தூசிப்படை. தூசிப் படையினது தன்மையை மேற்கொண்டதோர் உவகை
என்க. அஃதாவது: தாம் தாம் முந்திச் செல்லுதல் வேண்டும் என்ற
விருப்பமுடையராய் என்றவாறு. இதனை, இந் நூலில் ஆறாம் பாடல்
31ஆம் அடிக்கண் 'அணியணியாகிய தாரர்' என்புழி ஆசிரியர்
பரிமேலழகர் "திரள் திரளாகிய தூசித்தன்மையராய்" என நுண்ணிதிற்
பொருள் கூறி மேலும் "தூசித்தன்மை - முன் செல்லுதல்" என அரிதின்
விளக்கிச் சேறலானும் உணர்க.
ஒருவர் ஒருவரின் - ஒவ்வொருவரும் என்றவாறு. நிறமொன்று
- நிறம் பொருந்திய என்றது, நெட்டி முதலியவற்றாற் செய்து நிற மூட்டிய
என்றவாறு. அவை வாள் வேல் தேர் முதலியன. நீர் அணி -
நீராடற்குரிய அழகுப் பொருள்கள் என்க. அங்காடி - நீரங்காடி.
அஃதாவது நீராடற்குரிய பொருள்கள் விற்கும் கடைத்தெரு.
அப் பொருள்கள் முன்கூறிய நெட்டியாலியற்றிய படைக்கலன்களும்,
பொன் மீன், பொன்னண்டு, மாலை, மணப்பொருள் முதலியனவுமாம்.
இத்தகைய அங்காடி அக்காலத்திருந்தமையை. |
|
|
|