எனவரும் புறநானூற்றுச் செய்யுளானும்
அதன் உரையில் "திருமுடிமேற்
சூடப்படும் கண்ணி" என அதன் உரையாசிரியர் விரித்தோதிச்
சேறலானும் உணர்க.
ஐ - வியப்பு. கண்டோர் ஐயெனக் கூறி வியப்பதற்குரிய
என்க.
ஆவி - மணப்புகை. புகையூட்டிக்கொண்டோர் என்க. ஐயென
என்பதனை ஆடையர்க்கும் கூட்டுக. நெய் - மணநெய். கூந்தல் -
மகளிர் மயிர். பித்தை - ஆடவர் மயிர்.
தளிரியலார் யானை மிசைச் செல்ல அவர் தம் கணவர்
புரவியின்மேல் அவர் புடைப் போவார் எனினுமாம்.
பொங்குசீர் மிக்க அழகு. வையம் - வண்டி. அமைப்போரும்
என்றும் பாடம். இதற்கு வையம் தேர் இவற்றைப் பண்ணுறுத்தி அவற்றில்
போவோரும் என்க. எவ்வாயும் போய்ப் பொய்யாம் என்னா என மாறுக.
பொய்யாம் என்றது பொய்ப்படுவேம் அல்லேம் என்றவாறு.
பொய்ப்படுதலாவது ஒருவர் ஒருவரிடத்தினின்றும் பிரிந்து போய்க்
காணப்படாதவர் ஆதல் காணப்படாதேம் ஆகேம் என்று, புடை கூட்டிப்
போவாரும் என்க. புடை கூட்டுதல் - ஓரிடத்தே சேரச் செய்தல் என்க.
போவநர் - போவார். ஈண்டு எண்ணும்மை தொக்கது.
தாரினருமாய்க் கண்ணியருமாய் ஆவியருமாய் ஆடையருமாய்க்
கூந்தலருமாய்ப் பித்தையருமாய் மகளிரும் மைந்தரும் அணிசெய்து
கொண்டு, அவருள் மகளிர் யானையிற் செல்ல அவர்தம் கணவர்
குதிரையில் அவர் புடை செல்ல, சிலர் வையத்தினும் சிலர் தேரினும்
செல்வர்; சிலர் பொய்யாம் என்று புடைகூட்டிப் போவர் என இயைக்க.
19 - 27: மெய்யாப்பு . . . . . . . துறை
(இ - ள்.) மெய்யார மெய்யாப்பு மூடுவார் - உடலுக்குப்
பொருந்தச் சிலர் மெய்ப்பை யிட்டுச் செல்லா நிற்பர், வையத்துக்கு
ஊடுவார் - வண்டியின்கண் ஏறிச் செல்வோருட் சில தலைவியர்
தங் கணவன்மாரோடு பிணங்காநிற்பர். ஊடல் ஒழிப்பார் -
அத் தலைவன்மார்கள் பணிமொழி பல கூறி அவர் தம் ஊடலை
அகற்றா நிற்பர், உணர்குவார் - அங்ஙனம் ஊடல் தீர்த்துழி
அம் மகளிர் ஊடல் தீர்ந்து அவரோடு அளவளாவி மகிழாநிற்பர்.
ஆடுவார் - சிலர் கூத்தாடாநிற்பர், பாடுவார் - சிலர் பாடாநிற்பர்.
ஆர்ப்பார் - சிலர் ஆரவாரியாநிற்பர், நகுவார் - சிலர் வாய்விட்டு
நகைப்பர், நக்கு ஓடுவார் - சிலர் நகைத்துக்கொண்டே ஓடாநிற்பர்,
ஓடித் தளர்வார் - சிலர் ஓடியதனாலே இளைப்பர், உற்றவரைப் போய்த்
தேடுவார் - சிலர் தமக்குரிய உறவினரை அங்குமிங்கும் சென்று
தேடாநிற்பர், ஊர்க்குத் திரிவு இலராகி - இவ்வாறு வையையை நோக்கிச்
செல்பவரே அல்லது ஊர்நோக்கித் திரும்பிப் போவார் ஒருவரும்
இலராய், கற்றாரும் கல்லாதவரும், கயவரும் - நன்கு |
|
|
|