(வி-ம்.) காதற் பரத்தை தன்
காதலான் மார்பில் கமழ்தாரை ஏதிலாள்
புனல் வாங்கிக் கூந்தல் இடக்கண்டு என இயைத்துக் கொள்க. எனவே
அக் காதலான் அவ் வேதிலாள் பொருட்டுத் தன்தாரைக் காதற்பரத்தை
அறியாதபடி புனலிற் போக்கினான் என்பதும், அதனை அறிந்த
அவ் வேதிலாள் அதனை எடுத்துத் தன் கூந்தலிலே சூட்டுங்கால்
காதற் பரத்தை கண்டனள் என்பதும் போதருதல் உணர்க.
ஏதிலாள் - என்றது. இற் பரத்தையை. 'ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு'
என்றும் பாடம்; இதற்குக் கூந்தலிடத்தே கண்டென்க. புறன்றந்து'
என்றும் பாடம். மற்றது அங்ஙனம் நிகழ்ந்த அதற்கு என்க. போதல் -
செலவு. இச் செவ்வி போதல் உண்டாம் என்று அறிந்து புனல்
புணர்த்தது வியப்பு என்றது. தலைவனைக் குறிப்பானே கள்வனே
இது நின் செயல் எனக் கடிந்து கொண்டபடியாம்.
என்று என ஒருசொல் வருவித்துக் கொள்க. கொல்: அசை.
இங்ஙனம் இற்பரத்தை கூறிப் பின்னர்த் தலைவனை நோக்கிப் பின்
வருமாறு கடிந்து கூறுகின்றாள்.
41 - 45: கயத்தக்க . . . . . . . துணை
(இ-ள்.) பெய்த கயத்தக்க பூ காமக் கிழமை நயத்தகு நல்லாளை
கூடுமாகூடும் முயக்குக்கு - ஐய நீரிலே பெய்யப்பட்ட மென்மைத்
தன்மை தக்கிருந்த மலர்மாலை பிறர்பிறர் இடத்தே சேராமல்
காமநுகர்ச்சிக்குரிய விரும்பத் தகுந்ததோர் அழகியையே குறிக்கொண்டு
சென்று கூடும்படி நிகழும் இப் புணர்ப்பிற்கு செவ்வி முலையும்
முயக்கத்து நீரும் அவட்குத் துணை - அந் நல்லாளுடைய
இளமுலைகளும் அவளாலே பொருந்தி ஆடப்பட்ட இப் புதுப்புனலும்
அவளுக்குத் துணைக் காரணங்களா யமைந்தன, கண்ணி நீர் விட்டோய்
- ஏடா! இவைகளேயன்றிச் செவ்வியும் இடனும் அறிந்து மாலையைப்
புனலிலே விட்டவனே!, அவட்கு நீயும் துணை - அவள் அப் பூ
மாலையை அணிந்து கொண்ட செயலுக்கு நீயும் ஒரு
துணைக்காரணமாகவே அமைகின்றனை என்று கூறி அவனோடு ஊடிக்
கொண்டாள்;
(வி - ம்.) பெய்த பூ என மாறுக. கய - மென்மை. பெருமையுமாம்.
காமக்கிழமை - காமநுகர்ச்சிக்கு உரிமையுடைமை எனவே, இற்பரத்தை
என்றாளாயிற்று. நயத்தகு நல்லாள் என்றது நீ என்னை நயப்பதினுங்
காட்டில் அவளைப் பெரிதும் நயந்தனை என்பது பட நின்றது.
கூடுமாறு கூடும் எனற் பாலது ஈறுகெட்டுக் கூடுமா கூடும் என நின்றது.
முயக்கு - புணர்ப்பு. செவ்விமுலை - இளமுலை. அவ் விளமுலைப்
போகம் விரும்பியே நீ மாலைவிட்டாய் ஆகலின் அவட்கு முலையும்
ஒருதுணையாயிற்று என்றாள். கண்ணிநீர் விட்டோய் என்ற விளி நீ
வேண்டுமென்றே நினது மாலையை நீரிற் போக்கினை என்பது |
|
|
|