பக்கம் எண் :

பரிபாடல்- வையை398

நாடு அறியக் கொண்டை அப்பி - அப் பூமாலையை உலகறியும் படி
தனது கொண்டையிலே சூட்டிக்கொண்டனள், எனல் - என்று ஊரவர்
கூறுமிச் செய்தியாகிய, நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் ஊடல்
கொடிய திறம் - நினைக்கு மாத்திரையே நினைப்பவர் நெஞ்சிற்குத்
துன்பந்தரும் ஊடற் கேதுவாகிய இக் கொடுந் தன்மை, கூடாமுன் -
தனது தலைவியைப் பிரிந்துசென்ற அத் தலைவன் அத் தலைவியின்பால்
வந்து சேர்தற்கு முன்னரே, ஊர்த்தலர் வந்து ஊர்ந்து கூடினால் -
ஊரின்கண்ணதாகிய அலர் மொழி வாயிலாய் வந்து பரவித்
தலைவியினது செவியையும் கூடுமாயின், கனல்புடன் ஊடாளோ -
சினத்தாற் கனலும் கனற்சியோடே அத் தலைவி ஊடமாட்டாளோ
ஊடுதல் இயல்பே, என - என்று கூறும்படி புனலாட்டு நிகழாநிற்ப;

      (வி - ம்.) கள்வனே நினது செயலெல்லாம் தலைவியறிந்து
ஊடியிருக்கின்றாள் ஆதலால் நினக்கு வாயிலாக யான் உடன்படேன்
என்பாள் முன்னர் ஏதிலான்போலும் குறிக்கப்பட்ட தலைவன்
மேலதாகவே இதனையும் கூறி வாயில் மறுத்தபடியாம். ஆங்கு: அசை.

      52. 'என்றேற்றுக் கொண்ட' என்றும் பாடம்.

      அத் தலைவன் தன் தலைவியின்பால் வந்து கூடாமுன் ஊடலுக்கு
ஏதுவாகிய கொடிய திறம் ஊர்த்தலராய் வந்து ஊர்ந்து தலைவியின்
செவியைக் கூடினால் ஊடாளோ என இயைத்துக் கொள்க. ஆங்கு:
அசை.

57 - 63: ஈப்பாய் . . . . . . பூ சுறார்ஆறு

      (இ-ள்.) பார்ப்பார் இவ் யாறு ஈ பாய் அடுநறாக் கொண்டது
எனப் படிவு ஒழிந்தார் - பார்ப்பனர் இவ் வையைப் புதுநீர் ஈக்கள்
மொய்ப்பதற்குக் காரணமான சமைக்கப்பட்ட கள்ளைத் தன்பாற்கொண்டு
தூய்தன்றாயிற்று என்று கருதி அதன்கண் ஆடுதலை ஒழிந்தனர்,
அந்தணர் ஆறு மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்று என்று தோயார்
- பார்ப்பனர் இவ் வையை நீரின்கண் ஆடிய ஆடவர் மகளிர்கள்
அணிந்திருந்த நறுமணப்பொருள்கள் தூவப்பெற்றுத் தூயதன்றாயிற்று
என அதன்கண் குளித்தலை ஒழிந்தனர், ஐயர் வையை தேம்மேவ
வழுவழுப்பு உற்றென ஆறு வாய்பூசுறார் - பார்ப்பனர் இவ் வையை
நீர் தேன் கலக்கப்பெற்று வழுவழுப்புடைத்தாயிற்று என்று கருதி
இவ் வையையாற்று நீரினாலே வாய்பூசுதலும் செய்யா தொழிந்தார்;

      (வி-ம்.) இவை மூன்றும் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கிவந்த
தாழிசை என்னும் கலிப்பா உறுப்பு.