பக்கம் எண் :

பரிபாடல்- வையை400

இயல் தேர்ப் பொருநன் திருமருத முன்துறை முற்றம் - நிறமிக்க
மணிகளாலே ஒப்பனைசெய்யப்பட்ட யானைகளையும் ஓட்டமமைந்த
தேரினையும் போர்த்தொழில் வன்மையையும் உடைய பாண்டிய
மன்னனுடைய வையையாற்றின் கண்ணதாகிய திருமருத முன்றுறை
எனப் பெயரிய நீராடுந்துறையினது முற்றத்தை, உடன்சென்று குறுகி -
ஒருங்கே சென்றடைந்து அத் துறையிடத்தே, பிணி கொள் யாழ்ப்
பாணர் தெரிமருதம் பாடுப - கேட்டோரைப் பிணித்துக்கொள்ளும்
இயல்புடைய யாழினையுடைய பாணர்கள் ஆராய்ந்த மருதப்
பண்ணினைப் பாடுவாராக, பாடிப் பாடிப் பாய்புனல் ஆடி ஆடி
- அப் பாட்டினைத் தாமும் பாடிப் பாடிப் பாய்ந்தொழுகும்
அந் நீரின்கண் ஆடி ஆடி, மகிழா நிற்பர்;

      (வி-ம்.) புரை: உவமவுருபு: மலையை ஒத்த உயர்ச்சியினையுடைய
யானை, கயிறு அணியானை, தொழில்பயில் யானை பலயானை எனத்
தனித்தனி கூட்டுக. கயிறு - யானைக்கிடும் புரசைக்கயிறு. அணி -
ஒப்பனை. தொழில் - யானைக்குரிய நடைத்தொழில் (கதி) தொழில்
நன்கு பயின்ற யானை என்றவாறு. குழீஇயினர்: முற்றெச்சம். குருமணி
- நிறமிக்க மணி. இயல்தேர் - நல்ல ஓட்டமமைந்ததேர்;
இலக்கணமமைந்த தேருமாம். பொருநன் - போர்த்தொழில் வல்லான்:
பொருநன், ஈண்டுப் பாண்டியன். பிணிகொள் யாழ் - கேட்டார்ப்
பிணிக்கும் பண்புகொண்ட யாழ் என்க. பாணர் மருதம் பாட
அதனைத் தாமும் பாடிப்பாடி ஆடினர் என்க. பாய்புனல் - வினைத்தொகை.

75 - 83: அருளியவர் . . . . . .. . . உண்டு

      (இ-ள்.) அருளியவர் ஊடி ஊடி - தம்மை அருளியவராகிய
தத்தம் கணவன்மாரோடு மகளிர் ஊடவும், உணர்த்த அக் கணவன்மார்
பணிமொழி கூறி அவ் வூடலை உணர்த்தா நிற்பவும், புகன்று கூடி
கூடி - உணர்ந்தவிடத்து அவரை விரும்பிக் கூடியும், மகிழ்பு மகிழ்பு
- மகிழ்ந்தும், தேடி தேடி தங் காதலரைத் தேடியும், சிதைபு சிதைபு
- அவரைக் காணப் பெறாது மனஞ்சிதைந்தும், சூடி சூடி -
மலர்மாலைகளைச் சூடியும், தொழுது தொழுது - வையையைத்
தொழுது வாழ்த்தியும், விழுதகை நல்லாரும் மைந்தரும் ஆடி -
இவ்வாறாகச் சிறந்த அழகினையுடைய மகளிரும் ஆடவரும்
ஆடுதலானே, இழுதொடு நின்ற மலி புனல் வையை - சேற்றோடு
கலங்கிநின்ற மிக்க வெள்ளத்தையுடைய வையையின்கண்ணதாகிய,
இந் நீர் - இப் புதுப்புனல், குணக்குச் சான்றீரே - குணத்தாலே
நிறைந்த பெரியீரே!, முழுவது மிச்சிலா உண்டு இமிழ்வது போன்றது
- முழுவதும் எச்சிலாம்படி பருகி உமிழ்ந்ததுபோன்றது காண்மின்
எனக் கண்டோர் கூறும்படி;