ஆறாம் பாடல்
-----
மதுரை
பொருட் சுருக்கம்
பாண்டியனுடைய தலைநகராகிய மதுரை அறிவானே ஆராய்ந்து
நோக்குமிடத்து இவ்வுலகினுள்ள ஏனைய நகரங்கள் அனைத்தினும்
சிறந்தது என்பது புலப்படும்.
உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப்
புலவர் புலக்கோலால் தூக்க - உலகனைத்தும்
தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்.
உரை
(இ-ள்.) தென்னவன் நான்மாடக்கூடல் நகர் - பாண்டியனது
மதுரைநகர். புலவர் புலக்கோலால் - நல்லிசைப்புலவர்கள் தமது
அறிவாகிய துலாக்கோலாலே, உலகம் ஒருநிறையா - இவ்
வுலகத்தேயுள்ள நகரங்கள் அனைத்தினது பெருமைகளையும் ஒரு
தட்டிலிடும் நிறையாகவும், தான் ஓர் நிறையா - தனது பெருமையை
ஒரு தட்டிலிடும் நிறையாகவும் கொண்டு, தூக்க - சீர்தூக்குமிடத்து,
உலகனைத்தும் வாட - உலகத்துள்ள ஏனை அனைத்து நகரங்களின்
பெருமையும் மெலிந்தேறாநிற்ப, வாடாத தன்மைத்து - தன் பெருமை
அங்ஙனம் மெலியாமல் தன் பொறையாலே தாழும் தன்மையுடைத்து;
(வி-ம்.) உலகம் ஆகுபெயரான் உலகிலுள்ள (மதுரை யொழிந்த)
நகரங்களைக் குறித்து, மேலும் அந் நகரங்களின் பெருமைக்கு
ஆகுபெயராயிற்று. தான் இரண்டனுள் முன்னது, மதுரை. பின்னது,
அசை. நிறை - நிறுக்கப்படுபொருள். புலக்கோல் - அறிவாகிய
துலாக்கோல். எனவே நிறுக்கப்படுவது பெருமை என்றாயிற்று.
நான்மாடக் கூடல்நகர் - மதுரைநகர். தென்னவன் -
பாண்டியன்.
குறிப்பு: இவ் வாறாவது முதலாகப் பதினொன்றாவது
இறுதியாகவுள்ள பரிபாடல் உறுப்புக்கள் அனைத்தும் புறத்திரட்டில்
'நகர்' என்னும் பகுதியிற் காணப்பட்டன. |
|
|
|