பக்கம் எண் :

பரிபாடல்- மதுரை408

பாண்டியனது அரண்மனை, இதழ் அகத்து அரும்பொகுட்டு அனைத்து
- அவ் விதழ்களின் நடுவே அமைந்துள்ள அரிய அழகுடைய
பொன்பொகுட்டையே ஒப்பதாம், தண்தமிழ்க் குடிகள் - அவ்
வேந்தனது அரண்மனையைச் சூழ்ந்திருந்து வாழாநின்ற குளிர்ந்த
தமிழ்பேசும் குடிமக்கள், தாதின் அனையர் - அம் மலரின்கண் உள்ள
மகரந்தத் துகளையே ஒப்பாவர், பரிசில் வாழ்நர் - அவரை நாடி
வருகின்ற பரிசில்பெற்று வாழுமியல்புடைய இரவலர், தாது உண்
பறவை அனையர் - அம் மலர்க்கண் தாதுண்டற்கு வந்து குழுமுகின்ற
வண்டுகளையே ஒப்பாவர், எம் பேர் ஊர் - இத்தகைய எழிலுடைய
எமது பெரிய மதுரையில் வாழ்வோர், பூவினுள் பிறந்தோன் நாவினுள்
- பிறந்த நால்மறை கேள்வி நவில்குரல் ஏம இன் துயில் எடுப்ப எழுதல்
அல்லதை - அத் தாமரைப் பூவினகத்தே தோன்றிய பிரமதேவனுடைய
நாவின்கண் தோன்றிய நான்காகிய வேதங்களை வைகறைப் பொழுதில்
அந்தணர்கள் ஓதாநிற்ப அவ் விசை தமது மிக்க இன்பமுடைய
உறக்கத்தைப் போக்கி உணர்த்தி எழுப்புதலாலே நாடோறும் எழுதலன்றி,
வஞ்சியும் கோழியும் போல - சேரன் தலைநகரமாகிய வஞ்சியில்
வாழ்வாரையும் சோழன் தலைநகரமாகிய உறையூரில் வாழ்வாரையும்
போல, கோழியில் துயில் எழாது - கோழியினது கூக்குரல் துயில் அகற்ற
எழார், வாழிய - அது நெடிது வாழ்க.

      (வி-ம்.) மாயோன் என்பது ஈண்டுக் கரிய நிறமுடையோன் என
அதன் பொருள் குறியாது திருமால் என்னும் பெயர் மாத்திரையாய்
நின்றது. கொப்பூழ் - உந்தி. புரையும் - ஒக்கும். சீர் - அழகு. 11ஆம்
அடிக்கண்ணதாகிய எம் என்பதனைச் சீரூர் என்பதனோடும் ஒட்டுக.
அகவிதழ் என மாறுக. தெருவம்: அம், சாரியை, பொகுட்டு - தாமரை
மலரகத்துள்ள கொட்டை. அண்ணல் - பாண்டியன். கோயில் -
அரண்மனை. தமிழ்க்குடிகள் - தமிழ் பேசுவோராகிய குடிகள் என்க.
'தாதுண்பறவை' என்றது வண்டுகளை. பரிசில் வாழ்நர் - பரிசில் பெற்று
அதனால் வாழும் இயல்புடையோர். அவராவார், நல்லிசைப் புலவர்,
பாணர், கூத்தர் முதலியோர்.

      பூவினுட் பிறந்தோன் - பிரமதேவன். நான்மறை - நான்காகிய
வேதம். ஏம இன்றுயில்: ஒருபொருட் பன்மொழி. இயற்கை
யின்பத்தினையும் காம இன்பத்தினையும் உடைத்தாகிய துயில்
எனினுமாம். ஏமம் - இன்பம். அல்லதை என்புழி ஐகாரம்
பகுதிப்பொருளது. வாழிய: அசை எனினுமாம். வஞ்சி: சேரன் தலைநகர்.
கோழி - உறையூர். இது சோழன் தலைநகர். வஞ்சியிலும் கோழியிலும்
வாழ்வோர் கோழி கூவுதலாலே துயிலுணர்ந்து எழுமாறு எழார் என்பது
கருத்து.

      இதனால் மதுரைக்கே சிறந்துரிமையுடைய அறிவு வளம் நன்கு
உணர்த்தப்பட்டமை உணர்க.

      இச் செய்யுளில் வரும் மாலையணி என்னும் உவமையழகினையும்
அதன் பொருட்சிறப்பினையும் உணர்ந்தின்புறுக.