ஒன்பதாம் பாடல்
-----
மதுரை
பொருட் சுருக்கம்
மதுரை வையையாறு உளதாகுமளவும் திருமகளுக் கிட்ட திலகம்
போல
விளங்கிப் புகழுடையதாவதன்றி அழியாது.
செய்யாட் கிழைத்த திலகம்போற் சீர்க்கொப்ப
வையம் விளங்கிப் புகழ்பூத்த லல்லது
பொய்யாத லுண்டோ மதுரை புனைதேரான்
வையை யுண்டாகு மளவு.
உரை
(இ-ள்.) மதுரை - மதுரைமாநகரம், புனை தேரான் வையை
உண்டாகும்
அளவு - ஒப்பனை செய்யப்பட்ட பாண்டியனுடைய வையைப் பேரியாறு
உளதாமளவும், சீர்க்கு ஒப்ப - தனது தலைமைத் தன்மைக்கேற்ப, செய்யாட்கு
இழைத்த திலகம் போல வையம் விளங்கி - திருமகட்கு இட்ட திலகம்
திகழுமாறு போல இவ் வுலகத்தே திகழ்ந்து, புகழ்பூத்தல் அல்லது -
புகழ்பரப்பிப் பொலிதலன்றி, பொய்யாதல் உண்டோ - பொய்ப்படுதல்
உண்டாகுமோ? ஆகாது.
(வி-ம்.) செய்யாள் - திருமகள். சீர் - தலைமைத்தன்மை.
பூத்தல் -
பொலிதல். பொய்யாதல் - பொய்ப்படுதல்; அழிதல்.
வையையாறு இருக்குந்துணையும் மதுரை அழிவின்றி நிலைபெறும்
என்பது கருத்து. புனைதேரான் - பாண்டியன்.
யாற்றுவளம் அரசன் செங்கோன்மையாலே உண்டாதல்
பற்றிப் 'புனை
தேரான் வையை' என்றார். இதனை,
"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப் பூவாடை யதுபோர்த்துக்
கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி
கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்த வெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி"
(கானல்-25)
எனவரும் இளங்கோவடிகளார் செய்யுளானும் உணர்க. |
|
|
|