பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்45

நான்காம் பாடல்
-----------

திருமால்

பொருட் சுருக்கம்

      1 - 5: ஐந்து பொறிகளால் உளதாகும் மயக்கவிருளை அகற்றி,
மைத்திரி முதலிய நான்கானும், அகத்தைத் தூய்மை செய்து, சமாதியாகிய
ஒரு நெறியின்கண்ணே தம்மைச் செலுத்திய நின் அன்பர்கள், நின்னைத்
தொழுது ஏத்தி நின் புகழை விரித்தோதினர். அப்புகழெல்லாம் நினக்கு
இயல்பாவன அன்றி வியக்கத்தக்கன அல்ல என்பது யாங்கள் நன்கு
அறிந்திருப்பினும், எளியேமாகிய யாங்கள் அப் புகழுட் சிலவற்றை நெறி
பிறழக் கூறுதல் நோக்கி நீ நகைத்தலும் கூடும். அந்த நகைப்பைப்
பெறுதலும் எங்கட்குப் பேறே ஆகுமாதலின், யாம் அறிந்த வண்ணம்
நின்னைப் புகழ்தற்கு நாணுவே மல்லேம்.

      6 - 9: நின் திருமேனி நீலமணியையும் கடலையும் முகிலையும்
ஒத்தது. அக் கரிய மேனியோடு முரணிய பொன்னாடையையும் உடையை;
பகைவர் உயிருடன் மாறுபட்ட ஆழிப்படையை உடையை;

      10 - 24: சிவந்த கண்ணையுடையோனே! பிரகலாதன் நின்னைப்
புகழ, அது பொறாத இரணியனுடைய மார்பினைப் பிளந்த நகத்தினை
உடையை. பண்டு நிலம் நீரினுள் முழுகிக் கிடந்தபொழுது நீ வராகமாகி
அந்நிலத்தை எடுத்து நிறுத்திய செயல் உலகந்தாங்கும் மேருமலையின்
செயலோடு ஒக்கும்.

      25 - 35: நின்வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றின்கண்
காணப்படுகின்றன; நின் தண்மையும் மென்மையும் திங்களிடத்தே
உள்ளன; நின் சுரத்தலும் வண்மையும் முகிலிடத்துள்ளன; நின்
காவலும் பொறுமையும் நிலத்தின்கண் உள்ளன; நின்மணமும் ஒளியும்
காயாம்பூவிடத்தே காணப்படுகின்றன; நின் தோற்றமும் அகலமும்
கடலிடத்தே காணப்படுகின்றன; நின் உருவமும் ஒலியும் விசும்பின்கண்
உள்ளன; நின் வரவும் ஒடுக்கமும் காற்றின்கண் உள்ளன; இவையும்
இன்னோரன்ன பிறவும் நின்னினின்றும் பிரிந்து நின்னையே தழுவி நின்
காவற் கண் அமைந்துள்ளன;

      36 - 48: கருடக்கொடியோனே! நினக்குப் பனை கலப்பை
யானை முதலிய கொடிகள் உள்ளன; எனினும்