பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்58

ஐந்தாம் பாடல்
செவ்வேள்

பொருட் சுருக்கம்

      1 - 10: கடலின்கண் பாறைகள் துகள்படும்படி பிணிமுகம்
என்னும் யானையிலேறிச் சென்று, வேற்படையாலே சூரபன்மனாகிய
மாமரத்தை வேரோடு வெட்டி நாவலந்தீவினுள் வடபகுதியிலுள்ள
கிரௌஞ்சம் என்னும் மலையை உடைத்து அதன் ஊடே
வழியுண்டாக்கியோனே! ஆறுமுகங்களையுடையோனே;

      11 - 21: நீ ஆறு தலையுடனும் பன்னிரண்டு தோள்களுடனும்
ஞாயிற்றை ஒத்த நிற அழகுடனும் தாமரைப்பூவின்கட் பிறந்த பிறவியை
உடையை; உலகத்தை அழிக்கும் இறைவன் மகனே! செவ்வேளே!
சால்பினையுடையோனே! என்று விழாவின்கண் வேலன் ஏத்தும்
வெறிப்பாடலும் உள; அங்ஙனம் கூறுவன உண்மையுமல்ல;
பொய்ம்மையுமல்ல; இவ் வுலகிற் கெல்லாம் நீயே தலைவன் ஆதலால்.
அவன் ஏத்துவனவற்றுள் நீ ஒன்றாயவழித் தலைமைச் சிறப்பினையுடைய
நீ அச் சிறப்பின்றி ஒழிவாய்! நல்வினையாற் சிறப்புடைய
உயர்பிறப்பினராதலும் தீவினையால் இழிபிறப்பினராதலும் ஆகிய இது
நின் ஆணையின்கட் பட்டது; ஆதலின், அச் சிறப்பு நினக்கு ஒரு
காலும் ஒழியாது.

      22 - 49: நான்முகனாகிய பாகன் செலுத்தாநிற்ப வேதமாகிய
குதிரைகள் பூட்டப்பட்ட நிலமாகிய தேரை ஏறிச்சென்று அரவு
நாணாகவும் மலை வில்லாகவுங் கொண்டு திரிபுரங்களை ஒரு
நெருப்புக்கணையாலே அழியும்படி எய்தவனும், தேவர்களுடைய
வேள்வியுணவினை உண்டவனும் ஆகிய இறைவன் இறைவியைக் கூடி
இன்புறும்பொழுது உண்டான கருவை, இந்திரன்
தன்பால் வேண்டிக்கொண்டமையானே அவ் விறைவனே பலவாகச்
சேதித்தருளினான்; அக் கருவை முனிவர்கள் எழுவரும் பெற்று
வேள்வித் தீயிலிட்டனர்; பின்னர் அதனைக் கார்த்திகை மகளிர்
அறுவரும் உண்டு கருக்கொண்டு சரவணப் பொய்கையின்கண்
தாமரைப்பூவாகிய பாயலில் நின்னை ஈன்றனர்.