பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்67

Untitled Document
ஒழிந்தோர் விழுங்கிச் சூல் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப்
பாயலிலே பெற ஆறுவடிவாக வளர்ந்தமை கூறிற்று..............இது பரி
பாடலிற் 'பாயிரும் பனிக்கடல்' என்னும் பாட்டான் உணர்க" எனவும்
வரும்.

36 - 45: கருப்பெற்று.................................அயின்றனர்

     (இ - ள்.) கருப்பெற்றுக்கொண்டோர் - சிதைந்த அக்கருவை
இந்திரன்பால் பெற்றுக்கொண்டவராகிய, ஏழுறு முனிவர் - ஏழ் என்னும்
எண்ணளவிற் பொருந்திய முனிவர்கள், கழிந்த சேய் ஆக்கை,
வசித்ததைக் கண்ட - இவ் வாற்றானே தாய் வயிற்றினின்றும் கழிந்த
குழவி உடலைப் பிளந்த செயலைக் கண்ட, மகா மாதவர் நொசிப்பின் நனி உணர்ந்து - அக் கரு அறுமுகனாய்த் தேவர் படைக்குத்
தலைவனாம் என்பதனை மிகப் பெரிய தவத்தையுடைய அம் முனிவர்கள்
தமது அவதிஞானத்தானே நன்றாகத் தெளிந்து, மனைவியர் வசிதடி
சமைப்பின் - தம் மனைவிமார்கள் சேதிக்கப்பட்ட இக் கருவினை
உட்கொண்டு தம் வயிற்றிற் றாங்கிக் குழவியாய் முதிரச்செய்யின்,
நிறைவயின் சாலார்-கற்புடைமையின்கண் அமைவுடையராகமாட்டார்
என்பது கருதி, வேட்டு - ஒரு வேள்வி செய்து, அழல் தானே தரிக்க
என உடன் பெய்தோரே - அவ் வேள்விக்கண் உண்டான தீயே
இவற்றைத் தாங்குவதாக என்று அக் கருக் கண்டங்களை ஒருசேர அத்
தீயின்கண் இட்டனராக, அவ் அவித் தடவு நிமிர் முத்தீப் பேணிய
எச்சில் - அந்த அவியோடு குண்டங்களில் எழுந்த முத்தீயும்
கொள்ளுதலானே சேடமாகியவற்றை, வானத்து வடவயின் உறை
எழுமகளிருள் - விசும்பின்கண் வடதிசைக்கண்ணே வதிகின்ற ஏழு
மகளிருள் வைத்து, கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய - கடவுட்
கற்பினையுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய, மற்றையோர் விளங்கு
ஆல் அறுவரும் அந்நிலை அயின்றனர் - ஏனையோராகிய
விளங்காநின்ற கார்த்திகை மகளிர் அறுவரும் அப்பொழுதே உண்டனர்;


     (வி - ம்.) கழிந்த சேயாக்கை வசித்ததைக் கண்ட எனக் கூட்டுக.
வசித்தது - பிளக்கப்பட்டது. நொசிப்பு - அவதிஞானம். அஃதாவது
எதிர்கால நிகழ்ச்சிகளை உணர்ந்துகொள்ளும் அறிவு. சப்த ரிஷிகள்
என்பராகலின், ஏழுறு முனிவர் என்றார்: ஏழ் என்னும் எண்ணுப்பெயரை
அடைகூட்டி வழங்கப்படும் முனிவர் என்றவாறு. வசிதடி -
துணிக்கப்பட்ட தசையாகிய கருத்துண்டுகள். அவதி ஞானத்தாலே இக்
கரு முருகனாம் என்பதனை நனியுணர்ந்து கண்ட மகாமாதவர் என்க.
மகா மாதவர் என்றது, அங்ஙனம் உணர்தற்குரிய தவப்பெருமையினை
யுடையர் என்பதுபட நின்றது. பிறனுடைய கருவைத் தம் மனைவியர்
வயிற்றிற் றாங்குதல் கற்புடைமைக்கு இழுக்காம் என்று கருதி
அழற்பெய்தனர் என்க.