பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்68

சமைத்தல் - தம் வயிற்றில் வைத்துக் குழவியாக வளரச்செய்தல்.
உடன்பெய்தோர் - ஒருசேரப் பெய்தார். தடவு - யாககுண்டம், முத்தீ
ஆகவநீயம், காருகபத்தியம், தக்கணாக்கினி என்பன. எச்சில் சேடம்;
நிருமாலியம். தீயிற்பெய்தலால் பிறன் கரு என்னும் குற்றம் நீங்கி,
நிருமாலியம் என்னும் சிறப்பை எய்த மகளிர் உண்பாராயினர் என்பது
கருத்து.

      எச்சில் - புரோடாசம் என்பர் பரிமேலழகர். வானத்து வடவயின்
என்க. ஆரல் என்பது ஆல் என இடைக்குறைந்து நின்றது. ஆரல்
- கார்த்திகை மீன். எழு மகளிர் - சப்தரிஷிகளின் மனைவிமார்கள்.
தீயிற்பெய்து சேடமாகிய விடத்தும் உண்ணாமைக்கு ஏது குறிப்பின்
உணர்த்துவார். கடவுள் ஒருமீன் சாலினி என்றார். கடவுட் கற்புடைய
சாலினி என்க. சாலினி - அருந்ததி, அறுவர் மற்றையோரும் என்புழி,
மற்றையோர் அறுவரும் என மாறுக. ஆலாகிய அறுவரும் என்க.
அந்நிலை என்றது அப்பொழுதே என்னும் பொருட்டாய் நின்றது.
அயின்றனர் - உண்டனர்.

      (பரிமே.) 37. மனத்தினை ஒன்றாக்கி நுண்ணியதாகக்
காண்டலாதலின் சமாதி நொசிப்பு எனப்பட்டது.

46 - 54: மறுவறுகற்பின்.............................சேஎய்

      (இ - ள்.) மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் - குற்றமற்ற
கற்பினையுடைய முனிவர் மனைவியராகிய அக் கார்த்திகை மகளிர்,
நிறைவயின், வழாஅது - அக் கரு வேள்வித்தீயின்கண் இடப்பட்டுச்
சேடமாய் விட்டபடியாலும் தங் கணவர் வேண்டவே உண்டாராதலாலும்
தம் கற்பின்கண் இழுக்காது, நின் சூலினர் - பெருமானே! நின்னைச்
சூற்கொள்வாராயினர், நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ்சுனைப்
பதுமத்துப் பாயல் பயந்தோர் என்ப - பின், உயர்ந்தோங்கிய
இமயமலையின்கண் நீலப்பூக்களையுடைய பசிய சரவணம் என்னும்
சுனையின்கண் தாமரைப் பூவாகிய பாயலிலே ஒருங்கே நின்னை ஈன்றனர்
என்று பௌராணிகர் கூறாநிற்பர், பெரும்பெயர் முருக - பெரிய
புகழினையுடைய முருகப்பெருமானே!, நின் பயந்த ஞான்றே - இவ்வாறு
நின்னைக் கார்த்திகை மகளிர் பெற்றபொழுதே, அரிது அமர் சிறப்பின்
அமரர் செல்வன் - பிறர் கிட்டுதற்கரிய விரும்புதற்குக் காரணமான
சிறப்பினையுடைய தேவர் கோமான், இகந்து வந்து - பகைமை
மிகுதியாலே தான் அம் முனிவர்கட்கு(க் கொடுத்ததையும் மறந்து
அவர்க்குத்) தான் வழங்கிய வரத்தையும் கடந்து அங்கே வந்து, எரி
உமிழ் வச்சிரங்கொண்டு எறிந்தென - தீக் காலும், தனது
வச்சிரப்படையாலே வெட்டினானாக, அறுவேறு துணியும் அறுவர்
ஆகி - முன் ஆறு வேறு ஆகிய துணிகளும் ஆறு வடிவமாய், ஒருவனை -
பின்னும் ஒரே உருவம் உடையை ஆயினை, ஓங்கு
விறல் சேஎய் - அப்பொழுதே அவ் விந்திரனைவென்று உயர்ந்த
வெற்றியினையுடைய செவ்வேளே;