பக்கம் எண் :

பரிபாடல்- வையை76

பெருக்கன்றோ என்று தலைவன் கூறியது, காமப் பெருக்கமும் வையைப்
பெருக்கை ஒக்கும் என்னும் குறிப்புடையதாகக் கொண்டு காதற்பரத்தை
பின்னரும் கூறுகின்றாள்;

      75 - 86: ஆம் ஆம் நீ கூறுவது உண்மையே! காமம்
எப்பொழுதும் ஒரு தன்மையிலே நிற்பதில்லையே! சிலரிடத்து விரைந்து
பெருகுகின்றது! சிலரிடத்து விரைந்து சுருங்கிவிடுகிறது. இதனால் காமம்
வையைப் பெருக்கினையே ஒப்பதுதான். நீ இனி இங்ஙனம் பொய்ச்
சூளுறுதலைத் தவிர். என்பதி, நின்பதிக்கு அண்மையில் இருக்கக்
கார்காலத்தில் புணையேறுதல் காரணமாக நின்னைத் தாழ்ப்பிக்கும்
இவ் வையை இளவேனிற் காலத்திலோ நீர் சுருங்கிக்கிடக்கும்; நின்
காமமும் அப்படிப்பட்டதே. நீ வலிய மகளிர்க்குத் தெப்பமாகிய
மார்பினை உடையாய்; இரவெல்லாம் அவரோடு தங்கினை; அவர்
கண்ணீருகுத்து நிற்பரே! நீ இங்கே வந்தமை அவர் அறியின் அவர்
நெஞ்சம் மேலும் கனலுமன்றோ! இனி நீ இங்கே வருதலை ஒழிக.

      87 - 93: அதுகேட்ட தலைவன் "ஏடி! யாரோ ஒருத்தி ஒரு
குளத்தின் கரையில் நின்றாள். நான் அங்கே குளித்தேன். அவள்
அறியாமையாலே அக் குளத்தில் ஆழமான இடத்திலிறங்கி நீருள்
முழுகிப்போனாள். அவளை எடுக்கப் போனேன். அவளே
எழுந்துவிட்டாள். பின் மயங்கி என்மேல் விழுந்தாள். அவளையன்றி
என்னை அணைந்தாளொருத்தியுமிலள். நான் ஆடிய ஆறுதான் யாது ?"
என்று வினவினான்.

      94 - 104: அதுகேட்ட காதற்பரத்தை அந்த ஆறு இவ்
வையைதான் என்றாள். தலைவன் "ஏடி! யான் பரங்குன்றின்
தலையைத்தொட்டு ஆணையிடுகின்றேன். யான் அப்படிச்
செய்யவில்லை" என்றான். இவ்வாறு தலைவன் கூறியது கேட்ட
காதற்பரத்தையின் இல்லிலே இருந்த முதுபெண்டிர், அவளை நோக்கி,
"ஏடி! நீ தகாது செய்கின்றனை! அவன் நினக்கு அஞ்சுகின்றான். சினத்தை
விட்டு அவனை ஏற்றுக்கொள்க; சினப்பாயாயின் அவன் இன்பம்
பதனழிந்து கெடும்; நீ சுட்டிக்கூறுபவளோ காமஞ்சாலா இளமையோள்;
நீ அவனைக் கடிந்து கொள்ளின் அவன் நின்னைவிட்டே நீங்குவான்;
பின்னர் இரவில் நீ அவனைத் தேடித் திரியவேண்டிவரும்; இவ்வாறு
செவ்வியறியாது ஊடுதல் பிழையாகும்," என அவளைக் கடிந்தனர்.
பிறரும் அவளை இரந்து வேண்டினர்; அதனால் அவள் ஊடல்
தீர்ந்தாள்; பின்னர் இருவரும் கூடி யின்புற்றனர்; வையையின்கண்
மகிழ்ந்து நீராடி யின்புற்றனர்; பின்னரும் ஊடினர்; கூடி ஆடினர்;