ஏழாம் பாடல்
----------
வையை
பொருட் சுருக்கம்
தலைவி தலைவனோடு நீராடினமை கேட்ட செவிலி மகிழ்ந்து
தோழியை நோக்கி நீவிர் ஆடிய நீராட்டின்பத்தை எனக்குக் கூறுக
என்றாள். அச்செவிலிக்குத் தோழி பின்வருமாறு கூறுகின்றாள்.
1 - 10: முகில்கள் கடல் வற்ற நீரை முகந்து கொணர்ந்து
பெரிதும் மழை பொழிந்தன; ஆதலால் வையை யாற்றில் நீர் பெருகி
நாடும் உயிரும் ஆக்கமுறும்படி வந்தது.
11 - 22: அவ் வெள்ளம் உதிர்ந்த பூக்களை வாரிக்
கொண்டும்,
மரங்களை வேரோடு அகழ்ந்தும், பள்ளங்களை நிரப்பியும், அணைகளை
உடைத்துக் கொண்டும் வந்தது; அந் நீர் பலவேறு மணப் பொருள்களை
உள்ளடக்கிக் கொண்டு புதிய நறுமணங் கமழாநின்றது.
23 - 39: மேலும் அவ் வெள்ளம் ஓடையிலுள்ள மலர்களை
முழுகச் செய்தது; இளமகளிர்கள் மணலில் எழுதிய பாவைகளை
அழித்தலாலே அவர்கள் அழுதனர்; ஒருபக்கத்தே முற்றாத
நெல்லினூடும் அரிந்த நெற்கதிர்ச் சூட்டினிடத்தும் வெள்ளம் புகுந்தது
என்று துடியை முழக்காநின்றனர்; ஒரு சார் ஊரைக் கடல் சுற்றியது
போலும் என ஆரவாரித்தனர்; சிலர் முகில்கள் ஓட்டையாயின என்றார் ; சிலர் பாக்கத்தை வெள்ளம் மூழ்குவித்தது என்றனர்; சிலர் சேரியை
நீர் கொண்டது என்றனர்; இவ்வாறு பலரும் பற்பல கூறும்படி வெள்ளம்
தலைவரது ஆசை வெள்ளம்போல் பெருகிப் பரவியது; உழவர்கள் தம்
சுற்றத்தாரோடு தம் தொழிலைச் செய்ய அவ்வெள்ளத்தினூடே சென்றனர்.
40 - 59: மேலும் அந்நீர் சோலைகளில் பரந்தது; மகளிர்
காதில் தளிரைச் செருகியது; மைந்தர் கண்ணியைப் பறித்தது; மகளிர்
அணிகலன்களையும் கவர்ந்தது; மைந்தர் அணிகலன்களையும் கவர்ந்தது;
அப்பொழுது அவ் வையை யாற்றின்கண் மதுரை மகளிர் பலரும் புகுந்து
ஆடாநின்றனர். |
|
|
|