பக்கம் எண் :

பரிபாடல்- வையை102

தன்கையால்" (புறா. 235) எனவருதல் காண்க. "நரந்தை நறும்புல்"
(புறநா. 132) என்பதும் காண்க. தாஅய் - பரந்து. ஒளிர்சினை
- மலரானும் தழையானும் விளங்காநின்ற கொம்பு. விரிந்த இணர்
- மலர்ந்த பூங்கொத்து. துளி - மழை. சிமை - சிகரம். உழந்த மாமரம்;
வளிவாங்கு சினைய மாமரம் எனத் தனித்தனி கூட்டுக. உயர்ந்துழி
- குறிஞ்சியினும் முல்லையினும் உள்ள. பயம்பிடை - மருதத்தினும்
நெய்தலினும் என்க. 'உயர்ந்துழியுள்ளன பயம்பிடைப் பரப்பி' என்னும்
இவ்வடி,
"முல்லையைக் குறிஞ்சி யாக்கி மருதத்தை முல்லை யாக்கிப்
புல்லிய நெய்தல் தன்னைப் பொருவரு மருத மாக்கி"
(ஆற்றுப் - 17.)

எனவரும் கம்பநாடர் செய்யுட்கு முதலாகும் போலும்.

      வளிவாங்குசினை - காற்றாலே வளைத்து
முறிக்கப்பட்ட கொம்பு என்க.

      (பரிமே.) பயம்பு - பள்ளம்.

16 - 22: உழவர் . . . . . . . . . . செம்பூம்புனல்

      (இ - ள்) உழவர் களிதூங்க - உழுதொழில் செய்வோர்
மகிழ்ச்சியின்கண் மிகாநிற்ப, முழவு பணைமுரல - முழாக்களும்
பெரும்பறைகளும் முழங்காநிற்ப; ஆடல் அறியா அரிவை போலவும்
- கூத்தினது இயல்பு உணராத கூத்தியர் மகள் போலவும், ஊடல்
அறியா உவகையள் போலவும் - இடனறிந்தூடி இனிதின் உணருவதாகிய
ஊடலின் இயல்பறியாத உவகையினையுடையாள் போலவும்,
வேண்டுவழி நடந்து - தான் வேண்டிய வழியெல்லாம் சென்றும்,
தாங்குதடை பொருது - தடை செய்வதாகிய அணையை உடைத்துக்
கொண்டு சென்று, விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவைபோல -
நூன்முறையாலே செய்யப்பட்ட உடலிற் பூசுதற்குரிய
கலவையினது மணம்போல, பொதுநாற்றம் உள்உள்ளுட்
கரந்து - நறுமணப் பொருள் பலவும், கூடினமையாலே
பொதுவாக மணக்கும் மணத்தை உள்ளே உள்ளே அடக்கி
வைத்துக்கொண்டு, செம்பூம்புனல் - அப்புதிய சிவந்த அழகிய
நீர், புதுநாற்றம் செய்கின்று - மேலே புதியவாகிய நறுமணத்தைப்
பரப்பாநின்றது;

      (வி - ம்.) புதுநீர் வந்தமையானே உழவர் களிதூங்க என்க.
பணை- பெரும்பறை. மூரல - முழங்க. ஆடல் அறியா அரிவைபோல
வேண்டுவழி நடந்தும், ஊடலறியா உவகையள் போலத் தாங்குதடை
பொருதும் என, நிரல் நிறையாக்கிக் கூட்டுக.

      ஆடல் - கூத்தினது இலக்கணம். கூத்திலக்கணம் அறியாதவள்
தன் மனம்போனபடி யெல்லாம் சென்று ஆடுதல்போல் நீரும் மதகு
கால்வாய் முதலிய நெறிபற்றிச் செல்லாது கண்டுழியெல்லாம் சென்ற
தென்க.