ஊடல் - ஊடலின்
இயல்பு. உவகையள் என்றது, செருக்குடையவள்
என்பது படநின்றது. ஊடலறியாச் செருக்குடையவள். தன் கணவனைக்
கடந்து நீங்குதல்போல நீர் தனக்குத் தடையாகிய அணைகளை
உடைத்துச் சென்றது என்க. விதியாறு - நூல்நெறி. மெய்க்கலவை -
உடலில் பூசிக்கொள்ளுதற்குரிய மணக்கூட்டு. புது நாற்றம் - இன்ன
மணம் என்று அறியவொண்ணாத புதிய மணம். செய்கின்று - செய்தது.
பூம்புனல் - பூவினையுடைய நீருமாம்.
(பரிமே.) 17 - 19. ஆடலியல்பு அறியாத அரிவை போலத்
தான்
வேண்டிய இடங்களில் நடந்தும், ஊடலியற்கை அறியாத ஊடலுவகையள்
கணவனைக் கடந்து நீங்குமாறுபோலத் தகைந்த அணைகளை முறித்தும்
போய்.
20. நூனெறியானாக்கிய மெய்ப்படுக்கும் கலவையது நாற்றம்
போல்.
23 - 30: கவிழ்ந்த . . . . . . . . . . வானென ஒருசார்
(இ - ள்.) ஒருசார் கயம் கவிழ்ந்த புனலின் கழுநீர்
அவிழ்ந்த
மலர்மீது உற்றென - ஒருபக்கத்தே குளம் வெள்ளம் பாயப்புகுந்த நீராலே
பெருகிச் செங்கழு நீரினது மலர்ந்த மலர்கள் முழுகும்படி மிக்கது என்று
சிலர் கூறாநிற்பவும், ஒருசார் மடநல்லார் மணலின் எழுதிய மாதர் பாவை
சிதைத்தது என அழ - ஒரு பக்கத்தே இளமையுடைய மகளிர் தாம்
மணற் பரப்பின் மேலே புனைந்த தம்மால் விரும்பப்பட்ட பாவையை
வையை நீர் அழித்தது என்று கூறி அழாநிற்பவும், ஒருசார் வயல் அகம்
இளநெல் அரிகால் - சூடு தொகுபுனல் பரந்தெனத் துடிபட -
ஒருபக்கத்தே வயலின்கண்ணே விளைந்து முற்றிய இளநெல்லின் மீதும்
அரிந்துவைத்த சூட்டின்மீதும் மிக்க வெள்ளம் பெருகிற்று என்று சொல்லி
அவற்றை ஓம்பும் பொருட்டு முழக்கும் துடிகள் முழங்காநிற்பவும், ஒருசார்
ஊர் ஓதம் சுற்றியது என - ஒருபக்கத்தே ஊரைக் கடலே பெருகிவந்து
சுற்றிக் கொண்டது என மாந்தர் ஆரவாரிப்பவும், ஒருசார் கார்தூம்பு
அற்றது என - ஒருபக்கத்தே முகில் துளித்தற்குரிய சிறு துளைகள்
உடைந்து பெரிதும் ஓட்டையாயிற்றுப் போலும் என்று சிலர் கூறாநிற்பவும் ;
(வி - ம்.) கயம் - ஓடையுமாம். கவிழ்ந்த புனல்
- வந்து புகுந்த
நீர், புனலாலே பெருகிய மலர் மீதுற்றது என்க. அவிழ்ந்த மலர் - விரிந்த
பூ. மாதர் - அழகுமாம். மடநல்லார் - இளமகளிர் என்க. மகளிர்
மணலின் மேலே பாவை எழுதி விளையாடுதலை, "வாலிழை
மடமங்கையர் வரிமணற் புனை பாவைக்கு" (புறநா - 11: 2-3) எனப்
பிறர் கூறுதலானும் உணர்க.
அகவயல் - வயலகம் என மாறுக. இள நெல் - மூன்றுதிங்களில்
பயிராகி விளையும் இயல்புடைய குறுவை யினத்து நெல் என்க. அரிகால்
- அரி; சூடு - அரிகளை அடுக்கிய போர்வு. |
|
|
|