பக்கம் எண் :

பரிபாடல்- வையை110

இருகூறாய்ப் பிரிந்து ஆடுதல் வழக்கமாதல்பற்றி வகை தொடர்ந்த ஆடல்
எனப்பட்டது. நல்லவர் - மகளிர்: மகளிர் தம்முள் வைத்து முன்
தலைவன் பாட்டாலே பேதுற்ற அவளை என்க. பரியூஉ - பரிந்து:
அறுத்து செய்யூ என்னும் வினையெச்சம்: வெகுண்டு பரியூஉ என மாறுக.
பரியூஉ என்னும் எச்சத்தைப் பரிய எனச் செயவெனெச்சமாக்குக. ஆறாடு
மேனி அணிகண்ட - ஆறாடினமையாலே பொலிந்து தோன்றும் மேனி
அழகைக் கூர்ந்து பார்த்து நின்ற என்க. அன்பன் - காதலன்: 'மேனி
நிலத்துய்ப்ப' என்றது நிலத்தின் மேல் வீழ்ந்து வணங்க என்றவாறு.
அதனானும் தீர்வு இலதாக என்க. மிதித்தல் - உதைத்தல். செம்புனல்
என்றது புதுப்புனல் என்பதுபட நின்றது.

      (பரிமே.) இனி இந் நீரணியின்பம் பெறுக யான் என வையையைக்
குறித்துக் கூறுகின்றாள்.

77 - 86: புரிநரம்பின்..................................புணர்ந்தெனவே

      (இ - ள்.) புகல்பாலை ஏழும் ஏழூஉப் புணர் புரிநரம்பு இன்
கொளை யாழும் - விரும்புதற்குரிய பாலைப்பண் ஏழினையும் எழுப்பிப்
புணர்த்துதற்குரிய முறுக்குண்ட நரம்பின்கண் இனிய தாள வறுதியைத்
தருகின்ற யாழினிசையும், இசையும் கூட - மிடற்றுப் பாடலும்
தம்முட் பொருந்த, குழல் அளந்து நிற்ப - அவற்றின் சுதியை வங்கியம்
அளந்து நிற்ப, முழவு எழுந்து ஆர்ப்ப - முழவு ஓசை எழுந்து முழங்காநிற்ப,
மன் மகளிர் - அரங்கேறி அரசனால் தலைக்கோல்
பெற்ற மகளிரும், சென்னியர் - பாணரும், ஆடல் தொடங்க -
கூத்தாடுதலைத் தொடங்க இவற்றானாய முழக்கத்துடனே, வார்புனல்
பொருது இழியும் - ஒழுகும் நீர் கரைகளை இடித்து ஓடுதலாலே எழுந்த
முழக்கமும் சேர்ந்து ஆரவாரிக்கும் தன்மை; உரும் இடி சேர்ந்த முழக்கம்
புரையும் - உருமேறாகிய இடியோடு சேர்ந்த முகில் முழக்கத்தை ஒக்கும்,
திருமருத முன்றுறை - திருமருத முன்றுறை எனப் பெயரிய துறையினை,
சேர் புனற்கண் துய்ப்பார் - எய்திய வையைநீரின்கண் ஆடி
இன்புறுவோர், தாமம் தலைபுனை பேஎம் நீர் வையை - மலர்
மாலைகளை வாங்கி நின் தலையிடத்தே சூட்டி மகிழ்தற்குக் காரணமான
அச்சந்தரும் ஆழ்ந்த நீரினையுடைய வையை யாறே!, இன்று நின் படிந்து
பயம் நீங்காமை புணர்ந்தென - யாம் இன்று நின்னிடத்தே நீராடி நீங்காத
இவ்வின்பத்தை எய்தினாற்போலவே, நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க
- என்றும் நின்னிடத்தே நீராடி நின்னால் பெறும் இன்பத்தைப் பாடி,
விடிவு எய்தி மகிழ்வேமாக;

      (வி - ம்.) ஏழு பாலையாவன:- செம்பாலை, படுமலைப்பாலை,
செவ்வழிப்பாலை, அரும்பாலை கோடிப்பாலை விளரிப்பாலை,
மேற்செம்பாலை என்பனவாம். எழூஉ - எழுப்பி. புணர்யாழ்,
கொளையாழ் எனத் தனித்தனி கூட்டுக. கொளை - தாளவறுதி. இசை
- மிடற்றுப் பாடல். குழல்