பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்119

உரை


1 - 11: மண்மிசை . . . . . . . . .நிகர்க்கும்

      (இ - ள்.) (17) முதல்வ - உயிர்களுக்குத் தலைவனே!, (29)
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் - கிரௌஞ்ச மலையை உடைத்த
ஒளிருகின்ற வேற்படையை ஏந்திய முருகப் பெருமானே!, பரங்குன்று
- நினது திருப்பரங்குன்றம், அவிழ் துழாய் மலர் - மலர்ந்த துழாய்
மாலையையும், தரு செல்வத்து - உயிரினங்கட்கு வழங்குதற்குரிய
செல்வத்தினையும், மிசைப்புள் கொடியோனும் - மேலே கருடப்பறவையை
எழுதப்பட்ட கொடியையும் உடைய திருமாலும், புங்கவம் ஊர்வோனும் -
ஆனேற்றினை ஏறிச் செலுத்தும் சிவபெருமானும், மலர் மிசை முதல்வனும்
- தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமதேவனும், அவனிடைத்
தோன்றி உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும் -
இப்பிரமதேவனிடத்தினின்றும் தோன்றி உலகின்கண் நிலவும்
இருளைப்போக்கிய ஆதித்தர் பன்னிருவரும், மருந்து உரை இருவரும்
- தேவ மருத்துவராகிய அசுவனி தேவர் இருவரும், திருந்து நூல்
எண்மரும் - திருந்துதற்குக் காரணமான மெய்ந் நூல்களை உணர்ந்த
வசுக்கள் எண்மரும், ஆதிரை முதல்வனின் கிளந்த நாதர்
பன்னொருவரும் - திருவாதிரை நாளிற்குரிய உயிர் முதல்வனாகிய
சிவபெருமானுடைய பெயராலே சொல்லப்பட்ட தலைவர் பதினொரு
உருத்திரரும், நல்திசை காப்போரும் - நல்ல திசையினைக் காக்கும்
திசை காவலர் எண்மரும், யாவரும் - ஆகிய இவரெல்லாரும், அமரரும்
அவுணரும் பிறரும் - இவரல்லாத தேவரும் அவுணர்களுமாகிய
ஏனையோரும், மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும் - உளம்
பொருந்திய உணர்ந்து கோடற்கரிய வேதத்தை உணர்ந்த சிறந்த
தவவொழுக்கமுடைய தெய்வ முனிவர்களும், நின் காரணமாக
மண்மிசைப் பற்று ஆகின்று - பெருமானே நின்னைக் காணும்பொருட்டு
இம் மண்ணுலகத்தின்கண் வந்து தங்குதற்குரிய இடமாகாநின்றது,
இமயக் குன்றம் நிகர்க்கும் - ஆதலால் இக் குன்றம் இமயமலையையே
ஒக்கின்றது;

      (வி-ம்.) முதல்வ! நின் பரங்குன்றம், நின்னைக் காணத் தேவரும்,
அவுணரும், முனிவரும் வந்து தங்கும் இடமாதலால், அது தேவர்
முதலியோர் தங்கும் இமயமலையை ஒக்கின்றது என்க.

      புள் - கருடப்பறவை. புள்மிசைக் கொடியோன் - திருமால்.
புங்கவம் ஊர்வோன் - சிவபெருமான்; புங்கவம் - காளை. மலர்மிசை
முதல்வன் - பிரமதேவன். பதின்மரும் இருவரும் - பன்னிருவரும்.
மருந்துரை யிருவரும் - தேவமருத்துவர் இருவரும். திருந்துநூல் -
மெய்ந்நூல். எண்மர் - வசுக்கள். ஆதிரைமுதல்வன் - ஆதிரைநாட்