பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்12

      (வி - ம்.) நிழலவை . . . . மார்பினவை என இவ்வாறு யாம் அறிந்த
அளவானே புகழ்ந்து கூறி யாம் ஒன்றுபு நின்தாள் நிழல் தொழுது, அது
வைகலும் பொலிகென வாழ்த்துவேம் என இயைத்துக் கொள்க.

      காமரு விரும்புகின்ற காமம் வருதற்குக் காரணமான சுற்றம்
எனினுமாம். காமம்வரு என்பது காமரு என மருவிற்று என்ப. சுற்றம் என்றது,
அடியார் கூட்டத்தினை என்க. நின் திருப்பெயரை ஓதுதலே எமக்குப்
பேரின்பம் என்பார், 'ஏமுறு நெஞ்சத்தேம்' என்றார்.
"பச்சைமா மலைபோன் மேனிப் பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தங் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே"

எனவரும் அநுபவமுடைய ஆழ்வார் மொழியும் காண்க. புலமையுள் வைத்து
வேதம் கூறுதல் தெய்வப்புலமையே ஆதல்பற்றித் திருமாலின் சிறப்புக்களில்
வேதத்தை அருளிச்செய்தது சிறந்த பெருமையாகக் கருதி 'வாய்மொழிப்
புலவ!' என்று விளித்தார். வாய்மொழி - வேதம். "அன்னமாய் அருமறைகள்
அறைந்தாய் நீ அவை உன்னை முன்னம் யார் ஓதுவித்தார்? எல்லாரும்
முடிந்தாரே?" எனக் கம்பநாட்டாழ்வாரும்,
"சூதென்று களவு சூதுஞ் செய்யாதே
வேதம்முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில்சேர் மாலிருஞ் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே!"
(திருவாய்மொழி 2: 10 - 10)

என: நம்மாழ்வாரும் ஓதுதல் காண்க. வேதம் அநாதியே ஆயினும்
சிற்றறிவினவாகிய உயிர்கள் உணரும்பொருட்டு விரித்தருளிய தெய்வப்
புலவனே! என்றவாறு.