(வி - ம்.) யானை - முருகப்பெருமான் ஊர்தியாகிய பிணிமுகம்
என்னும் யானை என்க. காரின் குரல் கேட்ட கதியிற்று என மாறுக.
கதியிற்று - தன்மைத்து. யானை முழக்கம் இடிமுழக்கத்தைக் கேட்பது
போன்றிருக்கும் என்றவாறு. நின் என்பதனைக் கோழிக்குங் கூட்டுக.
"குன்றெதிர் கூவக் கூவுதலானும்" என்னும் பரிமேலழகர் உரையான் அவர்
'குன்றெதிரக் கூவ என்றே பாடங்கொண்டனர் என்பது உணரப்படும்.
எதிர்குதிர் - மறுதலை முழை - குகை. அதிர்ப்பு - முழக்கம். ஈண்டு
எதிரொலி. ஆகின்று - ஆகாநின்றது.
(பரிமே.) 19 கேட்ட என்பதனை வாரணத்தொடுங் கூட்டுக.
21. எதிர் குதிர் - ஓருலக வழக்கு.
22 - 28: ஏழ்புழை.....................................வரவு
(இ - ள்.) (27 - 8) அம்ம நின் குன்றத்தால் கூடல்
வரவு -
பெருமானே! நினது திருப்பரங்குன்றத்தி லிருந்து மதுரைக்குச் செல்லும்
வழி, ஏழ்புழை ஐம்புழை யாழ் இசை - ஏழு துளையையுடைய
குழலிடத்தும் ஐந்து துளையையுடைய குழலிடத்தும் யாழினிடத்தும் பிறந்த
இசையைப் போன்று, கேழ்த்து அன்ன இனம்வீழ் தும்பி வண்டொடு
மிஞிறு ஆர்ப்ப - நிறத்தாலே ஒத்த தம் இனத்தை விரும்புதலையுடைய
தும்பியும் வண்டும் மிஞிறும் இசை பாடாநிற்பவும், சுனை மலர -
சுனைகள் நீர்ப்பூக்களைப் பூவாநிற்பவும், கொன்றை கொடி இணர்
ஊழ்ப்ப - கொன்றை மரங்கள் கொடிபோன்று நீண்ட பூங்கொத்துக்களை
மலராநிற்பவும், கொடி மலர் மன்றல மலர் - முல்லை முதலிய
கொடிகளின் மலர்கள் நறுமணமுடையவாய் மலராநிற்பவும், மலர் காந்தள்
வாய் நாற - மலர்ந்த காந்தட்பூ இடமெல்லாம் மணங்கமழாநிற்ப, நன்று
அவிழ் பன்மலர் நறை பனிப்ப நாற - இவைகளேயன்றி நன்றாக மலர்ந்த
பலவாகிய ஏனைப்பூக்களும் தேன் துளிப்பவும் மணங்கமழாநிற்பவும்,
தென்றல் அசைவரும் செம்மற்று - அந் நறுமணங்களை அளவித்
தென்றற்காற்றும் தவழும் தலைமையினையுடையது;
(வி - ம்.) அம்ம: கேட்பித்தற்கண் வந்தது. ஏழ்புழை
ஐம்புழை:
அன்மொழித் தொகை; ஏழு துளையினையுடைய குழலுக்கும் ஐந்து
துளையினையுடைய குழலுக்கும் பெயராய் நின்றன. புழை - துளை.
இசைபோல ஆர்ப்ப என்க. கேழ்த்து - நிறத்தால். வீழ்-விரும்பும். தும்பி
-வண்டு. மிஞிறு என்பன வண்டுகளின் சாதிவேற்றுமை. வண்டொடு
என்புழி ஒடுச்சொல் எண்ணுப் பொருட்டாகலின் உம்மையாக்கித் தும்பியும்
வண்டும் மிஞிறும் என ஏனையவற்றோடும் ஒட்டுக. சுனை தன்கண்ணுள்ள
பூவை மலர என்க. கொடியிணர் - நீண்ட கொத்து. ஊழ்ப்ப - மலர. நறை
- தேன்; இவற்றோடு தென்றலும் அசைவரும் என்க செம்மற்று -
தலைமைத் தன்மையுடையது. குன்றத்தால்: வேற்றுமை மயக்கம் வரவு -
நடைபாதை; வழி. |
|
|
|