பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்133

பெரிய தாமரை மொட்டுகளும் ஆகிய, செவ்வாய் ஆம்பல் செல்நீர்த்
தாமரை - சிவந்த தமது வாயாகிய அரக்காம்பல் மலரோடு கூடி இயங்கும்
இத் தாமரைகள் எல்லாம், புனல் தாமரையொடு புலம் வேறுபாடுறா -
தாம் பாய்ந்தாடிய அச்சுனை நீரின்கட் பூத்த தாமரையொடு சிறிதும்
காட்சி வேறுபாடு உறாத, கூர் எயிற்றார் - கூர்த்த பல்லினையுடைய
மகளிர்களு டைய, குவிமுலைப் பூணொடு மாரன் ஒப்பார் மார்பு
அணிகலவி - குவிந்த முலையின்கண் அணிந்த அணிகலன்களோடு
மதவேளை ஒப்பவராகிய கணவன்மார்கள் மார்பின்கண் அணிந்த
அணிகலன் மயங்காநிற்ப:

      (வி - ம்.) ஆரவாரத்தினிடையே சுனை பாய்ந்தாடியெழும்
பாவைய ராகிய கூரெயிற்றார். கண்முகம் தாள் கை கொங்கை முதலிய
உறுப்புக்களாகிய தாமரைகள் தாமாடிஎழுந்த சுனையின்கட் டாமரையோடு
வேறுபடாது ஒத்துத் தோன்றும் கூரெயிற்றார் எனத் தனித்தனி கூட்டுக.

      ஆய் - அழகு. இதழ் இமையாகிய இதழ். கயம் - குளம்.
தமனியக்கயம் - பொற்குளம் என்க. தோளாகிய பொற்குளத்தே மலர்ந்த
கையாகிய தாமரை என்க. மூலத்தினும் பரிமேலழகர் உரையினும் 'எங்கை'
என்றும் 'எம்கை' என்றுங் காணப்படுகின்றன. இவை தங்கை எனத்
திருத்தப்படுதல் வேண்டும்.

      கயமுகை என்புழிக் கய என்னும் உரிச்சொல் பெருமைப் பண்பு
குறித்து நின்றது. "தடவும் கயவும் நளியும் பெருமை" (உரி - 22) என்பது
தொல்காப்பியம்.

      பாஅய் - பாய்ந்து. தாள் - கால். பதுமம் - தாமரை. முகை -
மொட்டு. புலம் - காட்சிப்புலம். கலவி என்னும் செய்தென்னெச்சத்தைக்
கலவ எனச் செயவெனெச்சமாக்குக. மாரன் - மதவேள்.

      (பரிமே.) 112. சுனைக்கட்பாய்ந்தெழு பாவையராகிய (118)
கூரெயிற்றார் என மேலே கூட்டுக.

      117. செவ்வாயாம்பலொடு கூடியியங்கும் நீர்மையையுடைய
இத் தாமரைகள்.

120 - 123: அரிவையர் . . . . . . . . செல்லல்தீர்ப்ப

      (இ-ள்.) அரிவையர் அமிர்த பானம் - அவர்க்கு மகளிர் சமைத்த
அமிர்தம் போன்ற காமபானத்துடனே, உரிமை மாக்கள் உவகை அமிர்து
உய்ப்ப - அடிசில் சமைத்தற்குரிய மடைத் தொழிலாளர் இன்பந்தரும்
அமிழ்தத்தை ஒத்த அடிசிலைக் கொடுக்க அவற்றை யுண்டு, செந்தளிர்
மேனியார் மைந்தர் மார்வம் வழிவந்த செல்லல் தீர்ப்பர் - சிவந்த
மாந்தளிரை ஒத்த நிறத்தையுடைய அம் மகளிர் பண்டு தம் கணவர்
தம்மைப் பிரிந்தமையானே அவர் மார்பு தரவந்த துன்பத்தைத் தீராநிற்பர்;