பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்14

      28 - 35: திருமகள் சேர்ந்த நின் குற்றமற்ற மார்பு நீ பன்றியாகி
நிலத்தை எடுத்தமை கருதி, நீ நிலமகளை மணஞ் செய்தனை
என்பாருடைய சொல்லோடு (நின் மார்பின்கண் முன்னரே திருமகள்
இருத்தலானே) பொருந்திற்றில்லை;

      36 - 51: போரின்கட் பகைவரைக் கொன்றழிக்குந், தலைவனே!
நீ ஏந்திய ஆழிப்படை அவுணர்கள் தலைகளைப் பனங்காய்போல
உதிரும்படி செய்து அவர்களை அழிக்கும்; அதன் உருவம் கூற்றத்தை
ஒக்கும்; அவன் நிறம் பொன்சுடும் அழற்கொழுந்தையே நிகர்க்கும்.

      52 - 57: நின் மேனி நீலமணியையும் நின் கண்கள் இணைத்த
தாமரைமலரையும், நினது வாய்மை தப்பாது வரும் நாளையும், நினது
பொறை நிலத்தையும், நின் அருள் முகிலையும் ஒக்கும் என்று அந்தணர
் அருமறை கூறாநிற்கும்;

      58 - 68: கருடக் கொடியை உடையோனே! வேள்வியாசிரியன்
கூறும் மறைமொழி நினது உருவமாகும்; வேள்வித் தூண் நீயே
ஆகலான், அதன்கட் பிணிக்கப்படும் பசு நினது உணவாகும்; அவ்
வேள்வியின்கண் வேதமுறைப்படி அந்தணர் வளர்க்கும் வேள்வித்தீ நீ
அவ் வந்தணர் கண்கூடாகக் காணும் பொருட்டுத் தோன்றும் வெளிப்பாடாகும்;

      69 - 76: பெருமானே! நீ தேவர்களுக்கு அமிழ்தம்
வழங்கவேண்டும் என்று திருவுளத்திற் கருதிய அளவானே அதன்
பயனாகிய மூவாமையும், அழிவில்லா ஆற்றலும், சாவாமையும் அவர்களை
எய்தின! அத்தகைய பெரியோனே! எம்முடைய அறிவு கொடும்பாடு
அறியாமல் மெய்யுணர்வே பெறுக என்று யாம் எம் சுற்றத்தாரோடு
நின் திருவடியைப் பலகாலும் தலையுற வணங்கி வாழ்த்தாநின்றேம்.
   தொன்முறை இயற்கையின் மதியொ . . . . . .. .
   . . . . . . . . . . . . . . . . . . . . . . மரபிற் றாகப்
   பசும்பொ னுலகமு மண்ணும் பாழ்பட
   விசும்பில் ஊழி ஊழூழ் செல்லக்
 5 கருவளர் வானத் திசையில் தோன்றி
   உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
   உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்
   செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
   தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
10 றுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு