பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்140

சிமை - இடியேறு சூழாநின்ற நெடிய இமயமலைச் சிகரத்தின்கண்ணே,
எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி - தீயை ஒத்த மலராகிய
தாமரையின்கண் வீற்றிருக்கும் முதல்வனாகிய பிரமதேவனாலே
வீழ்த்தப்பட்ட பெரிய ஆகாயகங்கையை, ஊழ்த்து விழும் நிகர் மலர்
ஏய்ப்ப விரிசடைப் பொறை தணிவுறத் தாங்கிய - மலர்ந்து உதிராநின்ற
புதிய மலரைத் தாங்குமத்துணை எளிதாகத் தனது விரித்த
சடைப்பாரத்தின்கண்ணே அக்கங்கையின் வேகந் தணியும்படி
தாங்கியருளிய, தனிநிலைச் சலதாரி - ஒப்பற்ற நிலைமையினையுடைய
சலதாரி என்னும் ஏதுப்பெயரையுடைய, மணிமிடற்று அண்ணற்கு -
நீலமணி போலும் நிறத்தினையுடைய மிடற்றினையுடைய
சிவபெருமானுக்கு, உயர்ந்தவர் உடம்பட - தம் கணவராகிய உயர்ந்த
தவத்தையுடைய தெய்வமுனிவர் அறுவரும் உடம்பட, மதி ஆரல்
பிறந்தோய் - நன்கு மதிக்கப்படும் கார்த்திகை மகளிரிடத்தே பிறந்த
பெருமானே, நீ மை இரு நூற்று இமை உண் கண் மான் மறி தோள்
மணந்த ஞான்று - நீ மையாகிய கரிய நூற்றாலே அணியப்பட்ட
இமைக்கும் கண்ணையுடைய வள்ளியின் தோளைக் களவின்கண் மணந்த
நாளிலே, மெய்ஐ இருநூற்று நயனத்தவன் மகள் மலர் உண்கண் -
உடம்பின்கண்ணே ஆயிரங் கண்களையுடையவனான இந்திரன் மகளாகிய
தேவசேனையின் மலர்போன்ற மையுண்ட கண், மாவேனில் கார் ஏற்று
மணி மழை தலைஇ என - முதுவேனிற் காலம் கார்காலத்தின் தன்மை
பெறும்படி நீலமணி போன்ற நிறமுடைய முகில்கள் மழைபெய்தாற்போல,
தண்பரங்குன்று தணிமழை தலையின்று நினது திருப்பரங்குன்றத்தின்
மிசை தண்ணிய கண்ணீராகிய மழையைப் பொழியாநின்றது;

      (வி - ம்.) இருநூறு - கரிய துகள்: மையாகிய கரிய துகளால்
அணியப்பட்ட உண்கண். நூறு - நுண்ணிதாக நுறுக்கிய துகள். மானிட
மகள் என்பது தோன்ற 'இமையுண்கண்' என்றும், வள்ளிக்கிழங்கு
அகழ்ந்த குழியில் மானாலே ஈனப்பட்ட மகள் என்பதுதோன்ற 'மான்மறி'
என்றும் கூறினார். மான் என்பதற்கேற்ப மறி என்றார்; மான்குட்டி
என்றவாறு. மெய் ஐயிரு நூறு நயனம் என மாறுக. என்றது.
ஆயிரங்கண்களையுடைய இந்திரனை. நயனம் - கண். மணிமழை -
மணிபோன்ற நிறமுடைய முகில். மழை: ஆகுபெயர். தலைஇ
என-பெய்தாற்போல.

      இதனால் முருகவேள் மானிட மகளொருத்தியையும் தேவமகள்
ஒருத்தியையும் மணந்து தேவர்க்கும் மக்கட்கும் ஒத்த
உரிமையுடையராதல் விளக்கினமையும் உணர்க.

      மேலும் வள்ளியைத் தமிழர்க்குரிய சிறப்புப் புணர்ச்சியாகிய
களவுப் புணர்ச்சியின் வாயிலாய் மணந்தமை உணர்த்தினமையும் காண்க.
தணி -குளிர்ந்த.