பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்144

நின்று தன்பக்கலிலே வாராநின்ற முருகவேளை, தொழாஅ - தேவசேனை
தொழுது, ஐய (34) எம்போலும் கேழ்இலார் - ஐயனே எம்மைப்போன்று
பிரிவானே நிறம் கெட்டவராகிய; வைஎயிற்று எய்யா மகளிர் திறம் -
கூர்த்த பற்களையுடையவரும் நின்னியல்பு அறியாமல் நின் மயலிலே
அகப்பட்டவருமாகிய மகளிர்களினது தன்மை, இனி மழைபெய்ய உழக்கும்
கா - இனி மழை பெய்யவேண்டி வருந்தாநிற்கும் பொழிலின்
தன்மையையே ஒப்பதாம், திருவுடையார் மென் தோள்மேல் அல்கி
நல்கலும் இன்று - நின்னை எய்தும் பாக்கியமுடைய மகளிரின் மெல்லிய
தோள்மேல் எழுந்தருளி அவர்க்கு அளி செய்யும் தன்மையும் நினக்கு
இல்லை, வாழிய மாயா நின் தவறிலை - நீ இத் தன்மையுடையா யாகலின்
வஞ்சனே நீ வாழ்வாயாக!, நீ தவறுடையை அல்லை, நின்னியல்பு
அறியாமல் நின் மயலிற்பட்ட மகளிரே தவறுடையர் ஆவர், மாண் நலம்
உண்கோ - ஆதலால் யான் நினது மாட்சிமையுடைய நலத்தை
நுகரக்கடவனோ நுகரேன்காண் என்று, வெம் நோக்கத்தால் கைசுட்டிக்
கரையா - வெச்சென்ற பார்வையுடனே கையாற்றன்னைச் சுட்டிச் சொல்லி,
பெண்டின் இகலின் இகந்தாளை - அவன் வழிமுறைக் கிழத்தியாகிய
வள்ளி காரணமாக ஊடிச் செல்லாநிற்ப அங்ஙனம் செல்லும் தேவ
சேனையை:

      (வி - ம்.) ஊழ் தேய் கரை ஆரம் நூக்கி என மாறுக. ஊழ்-முறை:
மழை பெய்யுந்தோறும் நீர் பெருகுந்தோறும் முறை முறையாகத் தேய்ந்த
கரை என்க. காழ் - வயிரம். கேழாரம் - நன்னிறமுடைய முத்துமாலை.
பொற்ப - அழகுசெய்ய வருகின்ற முருகவேளை என்க. எம்போலும்
கேழிலாரே தவறுடையர் என்பது குறிப்பெச்சம். கேழிலார் என்றது
பிரிவாற்றாது நிறம்கெட்ட மகளிர் என்றவாறு.

      திருவுடையார் - நின்னை எய்தும் பாக்கியம் உடைய மகளிர்.
எய்யா - அறியாத. நின்னியல்பறியாது மயங்கிய மகளிர் என்க. எய்யா
மகளிர் திறம் மழைக்கு வருந்தும் காவினது திறத்தை ஒக்கும் என்க.

      வெந்நோக்கம் - வெச்சென்ற பார்வை. கைசுட்டி என்றது யான்
நின் மாணலம் உண்கோ என்புழித் தனது விரலைத் தன் மார்பின்கண்
வைத்துச் சுட்டி என்றவாறு. கரையா: செய்யா என்னும் வாய்பாட்டு
வினையெச்சம்; கரைந்து என்க. கரைதல் - கூறுதல். பெண்டின்-பெண்டு
காரணமாக. பெண்டு-வள்ளி.

      (பரிமே.) 34. காவை ஒத்தலாவது: கா தனக்கு இன்றியமையாத
மழையை வருவித்துக்கொள்ளமாட்டாது. அது தானே வந்துழிப் பொலிந்து
வாராத வழியும் ஆமளவும் ஆற்றி ஆகாத எல்லைக்கண் இறந்துபடுதல்
(பி - ம். இறந்துபடுமாகலான்). அத் தொழில்களான் ஒத்தல்.