36 - 44: அவ்வேள்..................................வண்டு
(இ - ள்.) அவ்வேள் திருந்து அடி தலைக்கண்ணி தோயத்
திறை
கொடுப்பானை - அதுகண்ட அம் முருகவேள் அங்ஙனம் ஊடலானே
சென்ற தேவசேனையைத் தொடர்ந்து சென்று அவளுடைய திருந்திய
அடியின்மேல் தனது தலையிற் சூட்டப்பட்ட மாலை தோயும்படி
வணங்கித் தனது வணக்கமாகிய திறைப்பொருளை அவளுக்குக் கொடுப்ப
அங்ஙனம் கொடாநின்ற முருகவேளை, வருந்தல் என அவற்கு மார்பு
அளிப்பாளை - நீ இனி வருந்தாதேகொள் என்று ஆறுதல்கூறி ஊடல்,
தீர்ந்து அவனுக்குத் தனது மார்பைத் தேவசேனை அளிக்க, ஒள் இழை
இறுகிறுக யாத்து கோதை கோல் ஆக குறுகல் என்று புடைப்ப -
அதுகண்ட ஒள்ளிய அணிகலன் களையுடைய வள்ளி சினந்து
அம் முருகவேளின் கைகளை இறுக இறுகக் கட்டிவைத்துத் தனது
மாலையையே அடிக்கும் கோலாக்கொண்டு 'நீ இனி அவள்பால்
செல்லாதே செல்லாதே' என்று கடிந்து அடியாநிற்ப, ஒருவர் மயில்
ஒருவர் ஒண்மயிலோடு ஏல - அந் நிகழ்ச்சியினைக் கண்டு நின்றனவாகிய
ஒருவர் மயில் ஒருவர் மயிலோடு போர்தொடங்காநிற்பவும், இருவர்
வான்கிளியும் மழலை ஏற்பின் - வள்ளியும் தேவசேனையுமாகிய
இருவருடைய உயர்ந்த கிளிகளும் தம்முட் பகைகொண்டு ஒன்றை
ஒன்று மழலைச்சொல்லாலே வையத்தொடங்கவும் அவ்வளவிலே,
வெறிகொண்டான் குன்றத்து வண்டு - வெறியாட்டினை உவந்து
ஏற்கும் முருகவேள் உறையும் திருப்பரங்குன்றத்து வாழும்
வள்ளியினுடைய வண்டு, கொண்டை செறிவண்டு மேல்சென்று
பாய்ந்தன்று - தேவசேனையினது கொண்டையின்கட் செறிந்த
வண்டின்மேல் சென்று மோதா நின்றது.
(வி - ம்.) வேள் - முருகவேள். தலைக்கண்ணி - தலையிற்
சூட்டபட்ட மாலை. திருந்தடி - இலக்கணமமைந்த அடி என்க. திறை
வென்றோர்க்குத் தோற்றோர் திறை கொடுப்பது மரபாகலின், ஊடலின்
கண் தோற்ற வேள் தன் வணக்கமாகிய திறைப்பொருளைக் கொடுத்தான்
என்க. குறுகல் - செல்லாதே. ஒள்ளிழை: அன்மொழித் தொகை: வள்ளி.
யாத்து - கட்டி. புடைப்ப - அடிப்ப.
இருவர் ஊர்திகளாகிய மயிலிரண்டும் தம்முட் பகைத்துப்
போர்
தொடங்க என்க. வான்கிளி - உயர்ந்த சாதிக்கிளி: வானத்திற்றிரியும்
கிளியுமாம். மழலை ஏற்பின் என மாறுக. மழலை ஏற்றல் - மழலைச்
சொல்லானே வைதல். கொண்டை - தேவசேனையினது கொண்டை என்க.
குறமகளாதலின் வள்ளியின் வண்டைக் 'குன்றத்து வண்டு'
என்றார்.
வெறிகொண்டான் - வெறியாடலை உவந்து ஏற்றுக்கொண்டவனாகிய
முருகன். குன்றம் - திருப்பரங்குன்றம்.
ப.- 10 |
|
|
|