பக்கம் எண் :

பரிபாடல்- வையை154

முறுக்கினர்; சிலர் குங்குமச்சேறு அகிற்சாந்து பச்சைக்கருப்பூரம் ஆகிய
இவற்றைச் சாத்தம்மியிலிட்டுத் தீநிறம்பெற அரைத்தனர்; சிலர்
பொன்னாற் செய்த சங்கு நண்டு இறவு வாளை என்பனவற்றை நீரிலிட்டு
வாழ்த்தினர்; சிலர் வறியோர்க்கு வழங்கினர்; சிலர் நீனிறக்கூந்தலில்
பத்துவகைத் துவர்களையும் தேய்த்து நீராடினர்; சிலர் எண்ணெய்
நீங்கும்படி அரைப்பைத் தேய்த்துக் கொண்டனர். சிலர் மாலையையும்
சந்தனத்தையும் கத்தூரியையும் அணிகலன்களையும் நீரிலிட்டனர்; சிலர்
மதுவை நீரில் ஊற்றினர்;

      95-99: இவ்வாறு அமைந்த மகளிருடைய நிறம் நீர்
விளையாட்டினால் ஒளிமிக்கது; முக முதலியன சிவந்தன; இங்ஙனம்
ஆடியும் அவர்கள் கண்கள் பின்னரும் அந் நீரின்கட் சென்றன; அவர்
கண்கள் மதவேளின் கூர்மைசெய்யப்பட்ட அம்புகள்போற் பொலிந்தன.

      100- 111: மகளிர்நிலை இங்ஙனமாக மைந்தர் சிலர்
வாழைத்தண்டைப் புணையாகப் பற்றி நீரின்மேல் தாவித்தாவிச்
செல்லாநின்றனர்; சிலர் தாழம்பூவின் தாதினை நீரின்மேல் தூவினர்;
சிலர் ஓடத்திலேறி அதனை நீரோட்டத்தோடே சேரச் செலுத்தினர்;
சிலர் நீரோட்டத்தை எதிர்த்தாடி, இளைத்தமையாலே மெல்ல மெல்ல
ஆடினர்; சிலர் மகளிர் தம் சிற்றிலின்கண் அட்ட சிறுசோற்றை
உண்ணச்சென்றனர். சிலர் மகளிருடைய பந்தையும் கழங்கையும்
களவுகொண்டு ஓடி நீரிற் பாய்ந்தனர்; இங்ஙனம் ஆடலாலே
அப் புனல் தெளிவிலதாயிற்று.

      112-125: இவ்வாறு, நீர்விளையாட்டு நிகழ்ந்த பின்னர்,
மாலைப்பொழுது வரத் திங்கள் மண்டிலம் தோன்றிற்று; அங்குள்ள
மாந்தர் மீண்டும் மதுரைமூதூர் புகத் தொடங்கினர்; தாங்கள்
அணிந்திருந்த பகற்பொழுதிற்குரிய அணிகலன்களை அகற்றினர்;
மாலைப்பொழுதிலே மலரும் மலர்களையும், தோளணி தோடு
முத்துமாலை முதலிய அணிகலன்களையும், அணிந்து கொண்டனர்;
பலர் பாடினர்; அவர்தம் பாட்டொலியும், பரவுவார் ஒலியும், புகழ்வார்
ஒலியும், ஆடுவார் ஒலியும், தாள ஒலியும், தேன்வண்டுகள் இசைக்கும்
ஒலியும் மிகுந்தன; இங்ஙனம் எழுந்த பண்ணொலி கேட்டு ஊரிலுள்ள
வண்டுகள் தம் இனமென்று கருதி எதிர்வந்து இசைத்தன; பாடுவோரது
கொண்டையின் கண்ணிருந்த வண்டுகளும் அவற்றோடு கூடி இசைத்தன;
எல்லோரும் தென்றிசைநோக்கி மீண்டனர்; அப்பொழுது
மாடத்தினுள்ளிருந்தெழுந்த மணப்புகை மலையின்மேல் தங்கி எழுந்த
பனியை ஒத்தது.