பக்கம் எண் :

பரிபாடல்- வையை159

130 அருங்கறை அறையிசை வயிரியர் உரிமை
    ஒருங்கமர் ஆயமொ டேத்தினர் தொழவே.
      என்பது, பருவங்கண்டு வன்புறை எதிரழிந்து தலைமகளது
ஆற்றாமை கண்டு தோழி தூதுவிடச் சென்ற பாணன் பாசறைக்கண்
தலைமகற்குப் பருவவரவும் வையைநீர் விழவணியும் ஆங்குப்பட்ட
செய்தியும் கூறியது.

கரும்பிள்ளைப் பூதனார் பாட்டு; மருத்துவன் நல்லச்சுதனார் இசை;
பண்ணுப் பாலையாழ்

உரை

1 - 8: மலைவரை . . . . . . . . .வையைப்புனல்

      (இ - ள்.) மலைவரை மாலை அழிபெயல் - மலையிடத்தே
மாலைப் பொழுதிலே பெய்த மிக்க மழையாலே, காலை வையைப் புனல்
- மறுநாள் காலைப்பொழுதிலே வையையாற்றின்கட் பெருகிய நீர்,
நிலவரை அல்லல் நிழத்த - நில எல்லையின்கண் பசி முதலிய
துன்பங்கள் சுருங்கிய, விரிந்த பல உறு போர்வை - மலர்ந்தனவாகிய
பலவேறு மலர்கள் நெருங்கின போர்வையுடனே, பருமணல் மூஉய் -
யாற்றின்கண் பண்டு நீரின்மையானே வறந்து பரவிக்கிடந்த பரிய
மணற்பரப்பை மூடிக்கொண்டு, வரி அரியாணு முகிழ்விரி சினைய மாதீம்
தளிரொடு - வரிகளையுடைய வண்டுகள் மொய்க்கப்பட்டு அழகிய
மொட்டுக்கள் மலர்ந்த கொம்புகளையுடைய மாமரத்தினது காண்டற்கினிய
தளிர்களோடு, வாழை இலை மயக்கி - வாழையின் இலைகளையும்
மயக்கி, ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ - ஆராய்ந்து அளவிடப்படாத
பல்வேறு ஓசைகள் ஒலியாநிற்பவும், பறை அறைய - கரைகாவலரை
அழைத்தற்குரிய பறைகள் முழக்கும்படியும், செல வரை காணா
கடல்தலைக் கூட - சென்று எல்லை காணப்படாத கடலைக் கூடுதற்கு,
போந்தது - வந்தது;

      (வி-ம்.) பெயலானே வையையின்கட் புனல் நிழத்த மூஉய் மயக்கி
அறையூஉ அறையப் போந்தது எனக் கூட்டுக.

      மலைவரை என்பதன்கண் வரை என்பது ஏழனுருபின் பொருட்டு.
அழி - மிகுதி, "அழிதரும் கம்பலை" (மதுரைக்காஞ்சி - 554) என்புழியும்
அஃதப்பொருட்டாதல் அறிக. பெயலான் எனற்பால ஆனுருபு இறுதியிற்
றொக்கது. செல என்னும் செயவென்னெச்சத்தைச் சென்று எனச்
செய்தனெச்சமாகத் திரித்துக்கொள்க. செலவரை, நிலவரை
என்னுமீரிடத்தும் வரை எல்லை என்னும் பொருட்டு.