மூழ்த்து ஏறி - முறைமுறையாக வந்து
மொய்த்து விரைந்து
அவற்றின்மேல் ஏறி;
(வி-ம்.) மண்டி ஆடுதல் - கூடி ஆடுதல். சனம் - மக்கள்.
மண்டி
என்னும் செய்தெனெச்சத்தை மண்ட எனச் செயவெனச்சமாக்குக. மண்ட
- செல்லுதற் பொருட்டு என்க.
"தாளித நொய்ந்நூற் சரணத்தர்" என்ற தொடர்க்கு
நன்கு பொருள்
விளங்கவில்லை. தாளிதம் என்னும் பெயரையுடையதும் நுண்ணிய
நூலானாயதும் காலிலே மாட்டி அணிந்து கொள்ளுவதுமாகிய ஒருவகை
உள்ளாடை என்று ஊகிக்கலாம். இவ்வாடை மகளிர் நீராட்டு ஆடையாக
இருக்கலாம். (கால்சட்டை) தாளிதமாகிய நொய்ந்நூலாடையிட்ட
சரணத்தராய் என்க. சரணத்தர் - காலையுடையோர். வேறு பொருள்
தோன்றினும் கொள்க. மேகலை ஏணிப்படுகால்: இருபெயரொட்டுப்
பண்புத்தொகை. ஏணியினது படிபோல ஒன்றற்கொன்று வடம் உயர்தலான்
இருகோவை முதல் முப்பத்திரு கோவையீறாக அமைந்த பல்வேறு
மேகலையையும் ஏணிப்படுகால் என்றார். ஏணிப்படிகால் என்றும்
வழங்குவதுண்டு.
இறுகிறுக - மிகவும் இறுக என்க. 'இறுகிறுக யாத்துப்
புடைப்ப'
(9-40) என முன்னரும் போந்தமை நினைக. "இறுகிறுகத் தோட்கோப்புக்
கொள்ளார்" (நாலடி - 328) என்றார் பிறரும். தாள்இடீஇ - தாட்பூட்டி
என்க. இடீஇ - இட்டு. நெய்த்தோர் நிறம் - குருதிநிறம். நீரெக்கி -
துருத்தி. எக்குதல் - பிலிற்றுவித்தல்; பீச்சுதல் என்பர் இக்காலத்தார்.
முத்துநீர் - முத்துப் போன்ற தெளிந்த வெண்ணிறமுடைய பனிநீர்.
மூஉய் - மூடியை உடைய பெட்டி. தத்தி என்னும் செய்தெனெச்சத்தைத்
தத்த எனச் செயவெனெச்சமாக்குக. புகஅரும் - மேற்கொள்ள அரிய.
புள்ளியன்மா - குதிரை. பறவைபோன்று விரையும் குதிரை
என்றவாறு. மிகவருதல்: ஒருசொல். மிகையாக நடப்பினும் என்க.
பிடியானை மிகையாக நடக்கும் இயல்புடைய தாயினும் மேற்கொண்டு
ஊர்தல் இனிதென்பார். 'மிகவரினும் மீதுஇனிய' என்றார்; மீதிருத்தல்
இனிய என்க. வேழப்பிணவு - பிடியானை.
"பன்றி புல்வாய் நாயென மூன்றும் ஒன்றிய என்ப பிணவென்
பெயர்க்கொடை" (மரபு-58.)
என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தின்கண்
ஒன்றிய என்ற
இலேசானே பிணவு ஈண்டு யானைக்கு வந்தமை அமைத்துக் கொள்க;
அகவு அரும் பாண்டி - பெயரிட்டு வழங்கும் எருது பூண்ட அரிய
வண்டி என்க. பாண்டி - எருது; ஈண்டு வண்டிக்கு ஆகுபெயராய்
நின்றது. அத்திரி - கோவேறு கழுதை. சகடம் - வண்டி. சிவிகை -
பல்லக்கு. அதன்கண் காவுமரம் தண்டெனப்பட்டது. பண்ணி -
பண்ணுறுத்து, அணிசெய்து என்க. கதழ்தல் - மொய்த்தல். மூழ்த்தல் -
விரைதல்; "முரணுடை வேட்டுவர் மூழ்த்தனர் மூசி" (பெருங் 1. 56: 49)
என்புழியும் அஃதப் பொருட்டாதலறிக.
(பரிமே.) 10-11. இருகோவை முதல் முப்பத்திரு கோவை
யீறாக
ஒன்றற்கொன்று வடமேறுதலான் மேகலையை 'ஏணிப்படுகால்' என்றார்.
ப.--11 |
|
|
|