பக்கம் எண் :

பரிபாடல்- வையை162

13. மூடுதலுடைமையாற் பூப்பெட்டியை 'மூஉய்' என்றாள்.

16. பாண்டி என்பது ஆகுபெயர்.

19 - 26: முதியர் . . . . . . . . . .நண்ணி

(இ - ள்.) முகைப் பருவத்தர் - மலரும் செவ்வியை எய்திய
மொட்டுப்போன்ற பருவத்தை உடையவரும், மணம் வதிவம்பு அலர்
வாய் அவிழ்ந்தன்னார் - நறுமணந் தங்குதற்கிடமான புதிய மலர்
வாய்விரிந்தாற் போன்ற பருவத்தை உடையவரும் ஆகிய, இளையர் -
இளம்பருவத்து மகளிரும், விரவு நரையோரும் வெறுநரையோரும் -
இடையிடையே நரைவிரவிய பருவத்தோரும் முழுதும் நரைத்த
பருவத்தோருமாகிய, முதியர் - முதுமைப்பருவத்து மகளிரும் என்னும்,
இருதிறமாந்தரும் - இவ் விருவகைப் பருவத்தினரும், பதிவ தம்மாதர்
பரத்தையர் இன்னினியோரும்- கற்புடை மகளிரும் பரத்தையரும் ஆகிய
இம்முப்பருவத்து மகளிரும், பாங்கர் - இவர்க்குப் பாங்காகிய தோழியரும்
சிலதியரும், வித்தகர் ஆக்கியதாள விதி கூட்டிய அதிர் குரல்
இய மென்னடை போலப் பதிஎதிர் சென்று - இசைப்புலமையின்கண்
சதுரப்பாடுடைய புலவரானே ஆக்கப்பட்ட தாளவிதியானே கூட்டப்பட்ட
முழங்காநின்ற குரலையுடைய பல்வேறு இசைக் கருவிகளின் இசையும்,
மென்னடையிற் சென்றாற் போன்ற ஊரின் கண்ணுள்ள பிறமாந்தரோடுங்
கூடியாற்றின் எதிரே மெல்லெனச் சென்று, பரூஉக்கரை நண்ணி -
அவ் வியாற்றினது பரிய கரையை அடைந்து;

(வி-ம்.) முகைப் பருவத்தர் வம்பலர் வாயவிழ்ந்தன்னார் இளையர்
விரவு நரையோர் வெறுநரையோர் முதியர் இருதிறமாந்தரும் ஆகிய
பதிவதமாதர் பரத்தையர் இன்னினியோர் என மாறிக்கூட்டி வேண்டு
மிடமெல்லாம் உம்மையும் ஆக்கச்சொல்லும் விரித்துரைத்துக் கொள்க.

முகை - மொட்டு. வம்பு - புதுமை. அலர் - மலர். வாயவிழ்தல் -
மலர்தல். அலர் வாயவிழ்ந்தன்னார் என்றாரேனும் வாயவிழ்ந்த
அலரன்னார் என்பது கருத்தாகக் கொள்க. இன்னினியோர் -
இப்பருவத்தினர். விரவு நரை - கருமயிரின் ஊடே விரவிய நரை.
வெறு நரை - கருமயிரின்றி முழுதும் நரைத்த நரை என்க. பதிவதமாதர்
- கற்புடை மகளிர். வதம் - விரதம்; பதிவிரதமுடைய மாதர் என்றபடி.
பாங்கர் - இவ்விரு திறத்தார்க்கும் பாங்காயினார் என்க. வித்தகர் -
ஈண்டு இசைப்புலமையின் மிக்கோர். அதிர் குரல் இயம் எனக் கூட்டுக.
மென்னடை - தாளகதியில் ஒன்று. முடுகுநடை, இடைநிகர்நடை,
மென்னடை எனத் தாளநடை மூவகைப்படும். இவற்றைத் துரிதகாலம்
மத்திமகாலம் விளம்பிதகாலம் என்பர். பதி - மாந்தர்: ஆகுபெயர்.
மக்கள் நெருக்கத்தானே மெல்லச் செல்லும் செலவிற்கு இயங்களின்
மென்னடை உவமை.