பக்கம் எண் :

பரிபாடல்- வையை163

     பரிமே.) 24-5. தாளவிதி கூட்டிய மென்னடைபோறலாவது:-
இயங்கள் ஒன்றற்கொன்று கூறு வேறுபாடுடையவேனும் விளம்பித
தடையையுடைய தாளகதியால் எல்லாம் மென்னடையவாய்ச் செல்லுமாறு
போல, எதிர் செல்கின்றவர்களும் வன்மை மென்மை இடைமையாகிய
பண்பு வேறுபாடுடையரேனும் நெருக்கத்தால் எல்லாரும்
மென்னடையாய்ச் சேறல்.

27-34: நீரணி . . . . . . . . .சேர்குவோர்

     (இ-ள்.) நீர் அணி காண்போர் - அவருட்சிலர் அவ் வையை
யாற்றின்கட் பெருகி ஒழுகும் புதுநீரினது அழகினைக் கண்டு நிற்பார்,
நிரைமாடம் ஊர்குவோர் - சிலர் நிரல்பட்ட நீரணி மாடத்திலேறி
அவற்றைச் செலுத்தாநிற்பர், பேர் அணிநிற்போர் - சிலர் நீரின்கண்
ஆடவரோடு எதிர்ந்து செய்யும் போருக்குப் பெரிய அணிவகுத்து
நிற்பார், பெரும்பூசல் தாக்குவோர் - சிலர் அப் பெரிய நீராடற்
போரின்கண் தூசிப்படையாய்ச் சென்று தாக்கா நிற்பர், மா மலி
ஊர்வோர் - சிலர் குதிரைத் திரளில் ஏறி நீரினுட் செலுத்தாநிற்பார்,
வயப்பிடி உந்துவோர் - சிலர் வலிய பிடியானைகளின்மீது ஏறி அவற்றை
நீரின்கட் செலுத்தாநிற்பார், வீ மலியாற்றின் துருத்தி குறுகிதாம் வீழ்வார்
ஆகம் தழுவுவார் தழுவு எதிராது - வேறு சிலர் நறிய பூக்கள் மிக்க
யாற்றிடைக்குறையை அடைந்து அவ்விடத்தே தம்மாற் காதலிக்கப்
பட்டோராகிய தந்தலைவர் தமது மெய்யினைத் தழுவுவாராகவும்
அத் தழுவுதலை ஏற்றுக்கொள்ளாமல், யாம் ஊடல் குறை இன்
நசைத்தேன் நுகர்வோர் - முதல் நாளிரவின்கண் தாம் ஊடினராக
அவ்வூடல் தீராது குறையாக நின்றமையான் அவ்வூடலையே தொடர்ந்து
ஊடி அதனால் உண்டாகும் இனிய விருப்பமாகிய தேனை நுகரா நிற்பர்,
காமக் கணிச்சியால் கையறவு வட்டித்துச் சேமத்திரை வீழ்த்துச் சென்று
அமளி சேர்குவோர் - வேறு சிலர் ஊடியிருந்தேயும் காமம் என்னும்
கோடரி தமது நிறை என்னும் கதவினை உடைத்தொழிந்தமையானே
மேலும் ஊடற்கு வலியிலராய்த் தமது ஊடலைச் சுழற்றி எறிந்துவிட்டுத்
தங்கணவரை எதிர்கொண்டு காவலாகிய திரையை விடுத்து உட்சென்று
ஆண்டுப் படுக்கை யின்கட் சேராநிற்பர்;

     (வி-ம்.) நீர் அணி - புதுநீர்ப்பெருக்கின் அழகு. நிரைமாடம்:
வினைத்தொகை. நிரலாகச் செலுத்தப் படுதலால் நிரைமாடம் என்றார்.
மாடம் - இஃதொருவகை ஓடம்; இதனைப் பள்ளியோடம் என்றுங்
கூறுப. போர்க்குப் பெரிய அணிவகுத்து நிற்பார் என்க. பூசல் - போர்.
தாக்குவோர் என்றமையால் - முற்படச்சென்று அஃதாவது
தூசிப்படையாய்ச் சென்று தாக்குவார் என்றார் உரையாசிரியர்.
வட்டித்து - சுழற்றி.