பக்கம் எண் :

பரிபாடல்- வையை166

ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்" (உரி-32) என்னும்
தொல்காப்பியச் சூத்திரத்தானே அஃதப் பொருட்டாதல் உணர்க.
மாலுறுப்ப - மயக்கத்தைச் செய்ய. கைபுனை வேங்கை - கையாலே
பண்ணிவைத்த வேங்கை. பாயும் நிலையில் பண்ணப்பட்ட வேங்கை
உருவம் என்பார். 'கிளர்வேங்கை' என்றார். காணிய என்னும் எச்சத்தைக்
கண்டு எனத் திரித்துக் கொள்க. இனிச் செயவெவெனச்சமாக்கி
ஏதுப்பொருட்டாக்கலுமாம். மை - முகில். புரை: உவமவுருபு: மதிசெத்து
என்புழி மதி என்பது இசைநிறை. இஃது இசைநிறையாய் வருதல்
அதிகாரப் புறனடையாற் கொள்க.

      சிதைதல் - கட்டுக்கடங்காது கண்டபடி செல்லல்.

      (பரிமே.) அணிநிலைமாடம்: ஆகுபெயர்.

49 - 55: கூங்கை மதமா . . . . . . . நீகானும்போன்ம்

      (இ-ள்.) கூம் கை மதமா - அங்ஙனம் பிடியானை சிதைந்தமை
பொறாமல் பிளிறாநின்ற மதக்களிப்பையுடைய அக் களிற்றுயானை,
கொடும் தோட்டி கைந்நீவி - வளைந்த தோட்டிக்கும் அடங்காமற்
கடந்து, நீங்கும் பதத்தால் - சிதையும் அளவிலே, சிறந்தார் -
அதன்மேலிருந்த பாகுத்தொழிலிலே சிறந்த பாகர், உருமுப் பெயர்த்தந்து
- இடிபோலும் அதன் முழக்கம் ஒழியுமாறு, வாங்கி - அதனை
அப் புலிமுக மாடத்தினின்றும் நீக்கி, வயப்பிடி முயங்கிக் கால்கோத்து
- அப் பிடியானை சிதையாதபடி அதனை அணைவித்து, சிறந்தார்
நடுக்கம் களையல் - அப் பிடிமேலிருந்த மகளிரின் நடுக்கத்தைக்
களைதல், இதையும் கயிறும் பிணையும் இரியச் சிதையும் கலத்தை -
பாயும் கயிறும் மரக்கூட்டமும் கெட்டொழியக் காற்றால் அலைப்புண்டு
ஓடும் மரக்கலத்தை, பயினால் திருத்தும் திசையறி நீகானும் போன்ம் -
பயினாலே சீர்திருத்தி அதன் உள்ளிருப்போர் நடுக்கத்தைக் களையும்
திசையறிந்து செலுத்துதல்வல்ல நீகானுடைய செயலை ஒக்கும்;

      (வி-ம்.) கூம் - கூவும்: பிளிறாநின்ற. மதமா - ஈண்டுக் களிற்றி
யானை. கொடுந்தோட்டி - வளைந்த அங்குசம். கைந்நீவி - கைகடந்து:
தோட்டியாற் குத்தி அடக்கவும் அடங்காது கடந்து என்க. நீங்கும் பதம்
- தனது கைக்கடங்காது சிதையும் செவ்வி. உருமு - இடி; இடிபோலும்
பிளிற்றொலிக்கு ஆகுபெயர். பெயர்த்தந்து - பெயர்த்து. கால்கோத்தல்
- சேர்த்தல். சிறந்தார் இரண்டனுள் ஒன்று தந்தொழிலிற் சிறந்த பாகரும்,
மற்றொன்று பெண்மையிற் சிறந்த மகளிரும் என்க.

      இதை - பாய். கயிறு - பாயிழுக்கும் கயிறு, பிணை - பாய்
பிணைக்கும் மரங்கள். பயின் - ஒட்டுதற்குரிய பசைப்பொருள். இதனைப்
பிசின் என இக்காலத்தார் வழங்குப. இரிதல் - தம்நிலையிற்
கெட்டகலுதல். நீகான் - மரக்கலம் ஓட்டுபவன். மீகான் என்றும்
வழங்குதலுண்டு. (மீகான் என்றும் பாடம்.)