பக்கம் எண் :

பரிபாடல்- வையை168

அரண். கோட்டை - அரண். மனஅரண் அழிந்த மகளிரும் மைந்தரும்
என்க.

      "ஒன்றோடிரண்டா முன்றேறார்" எனவருந் தொடர் பொருள்'
காண்டற்கியலாதபடி உளது. "கூடுதற்குச் செல்கின்ற................................னும்
ஒத்திருக்கவும்" என இத் தொடர்பற்றிய பரிமேலழகர் உரையும் இடையே
சிதைந்தழிந்துளது.

      பதைபதைப்பு - மனத்தடுமாற்றுத் துயர். பல்சனம் - பல்வேறு
மாந்தர்கூட்டம். பல்சன ஒலி எனக்கூட்டுக.

      மன்னவர் - தம்முட் பகைத்த மன்னர் என்க. தண்டம் - படை.
தலைஇ - தலைப்பட்டு. ஒன்றியும் - உடம்பட்டுப்போதற்கு மனம்
இயைந்திருந்தும். ஒலி - சொல்: ஆகுபெயர் நின்ற - பின்னரும் பொருது
நின்ற என்க. நிகழ்ச்சியும் என்புழி உம்மை இசைநிறை.

      (பரிமே.) 56. (யாழ்ப்பக்கம்.) யாழ்க்கூறு.

      57. (அழிந்த மனக்கோட்டையர்.) அழிந்த துனியினையுடைய
மகளிரும் மைந்தரும்.

      59. (பதைபதைப்பு.) மெலிவுறுதல். மன்னவர் - மாறுபாட்டையுடைய
மன்னவர்.

      61. (ஒன்றியும்.) மனத்தான் இயைந்து வைத்தும். (ஒலி - ) வார்த்தை.

63 - 68: காமம்.............................போன்ம்

      (இ - ள்.) காமம் கனைந்து எழ - நெஞ்சத்திலே காமம்மிக்கு
எழாநிற்ப, கண்ணின் களி எழ - அதனானே தம் கண்களிலே அக்காமக்
களிப்புப் புறத்தார்க்குப் புலப்படும்படி எழாநிற்ப, ஊர் மன்னும் அஞ்சி -
ஊரினுள்ளார் அதனை அறிந்து அலர் தூற்றுவரே என்று மிகவும் அஞ்சி,
ஒளிப்பார் நிலை - அக் காமக்களிப்பினைப் புறத்தார்க்குப் புலப்படாதபடி
மறைக்கின்றவருடைய நிலைமை, கள்ளின் களி எழ - கள்ளுண்டவர்
தம்பால் அக் கள்ளின் களிப்புப் புறத்தார்க்குப் புலப்படும் படி எழாநிற்ப,
உள்ளம் உளை எழ அலர் அஞ்சி - தம் மனம் துன்புறும்படி ஊரவர்
அலர் தூற்றுதற்கு அஞ்சி, ஊக்கத்தால் - அதனைப் பிறர் அறியாமல்
முயலும் முயற்சியாலேயே, மதர் பரப்பி-அக் களிப்பினை யாவரும்
அறியும்படி தாமே பரப்பிப் பின், பார் அலர் தூற்ற - உலகம் பழி
தூற்றலைக் கேட்டு, உள் உள் நடுக்கி - தம் உள்ளே உள்ளே நடுக்கி,
களி மதர் காத்து கரப்பார் போன்ம் - மேலும் அக் கள்ளால் உண்டாகிய
களிப்பினைப் புறத்தார்க்குப் புலனாகாதபடி காத்து மறைப்பவருடைய
நிலைமையை ஒக்கும்;

      (வி - ம்.) தம் கண்ணிற் றோன்றும் காமக்களிப்பை
மறைப்பவருடைய நிலைமை கள்ளுண்டு அதனால் உண்டாகிய களிப்பை
மறைப்பவருடைய நிலைமையை ஒக்கும் என்க.