பக்கம் எண் :

பரிபாடல்- வையை170

நகில் முகடு - முலை முகடு. அளறு - கலவைக்குழம்பு. உறை கழித்து
வாங்கிய வள்ளத்திற்கு முகிலினூடிருந்து வெளிப்பட்ட திங்கள் உவமை.
வள்ளம் - கிண்ணம். 'உறுநறவு' என்புழி. உறு மிகுதி குறித்து நின்றது;
வெப்பம் மிக்க நறவு என்க. திகை - திசை. உவவு மதி - முழுத்திங்கள்.
பாம்பாலே பற்றப்பட்ட முழுத்திங்கள் மகளிர் கையாற் பற்றப்பட்ட
வள்ளத்திற்கு உவமை. மகரவலயம் - ஒரு வகைத் தலைக்கோலவணி.
எறிமகரம்: இயல்படைமொழி. அரமகள் - தெய்வமகள். வள்ளத்தை
வாயில்வைத்து நறாப்பருகும் மகளிர்க்குத் திங்களின்கண் வாய்வைத்து
அதன் ஒளியைப் பருகும் அரமகள் உவமை. இப்பகுதியில் வருமிவ்
வுவமைகளின் அழகு நினைந்து நினைந்தின் புறற்பாலன.

      (பரிமே.) 77. தலைக்கோலம் அழகு விளங்கும் நுதலியர் சிலர்.

      78. மதியது கலையை உண்கின்ற தெய்வமகள் போல்: மடா நிற்ப

79 - 86: மீப்பால் . . . . . . . . . பொலிகென்பார்

      (இ-ள்.) மீபால் வெண்துகில் போர்க்குநர் - சிலர் தம் உடலின்
மேலிடத்தே வெண்ணிற மெல்லிய ஆடையைப் போர்த்தாநிற்பர், பூப்
பால் வெண்துகில் குழல் சூழ்ப்ப - பூத் தொழிலைத் தன்பால் உடைய
வெள்ளிய துகிலைச் சிலர் கூந்தலின்மேற் சுற்றா நிற்ப, முறுக்குநர் - சிலர்
அதனை முறுக்கு வார், குங்குமச் செழுஞ்சேறு பங்கம் செய் அகில் பல
பளிதம் - சிலர் சிவந்த குங்குமக்குழம்பினையும் சேறாக்கப்பட்ட அகிற்
குழம்பினையும் பலவாகிய கருப்பூரங்களையும்; அறை மறுகுபட -
சாத்தம்மியிலிட்டு அவை ஒன்றுபடும்படி, புரை அறு குழவியின்
அளிஅமர் அழல் என அரைக்குநர் - குற்றமற்ற, குழவியாலே அவியைப்
பொருந்தின யாககுண்டத்தின்கண் எழும் தீயினது நிறம்பெற அரைப்பார்,
அலையில் நத்தொடு நள்ளி நடை இறவு வயவாளை வித்தி - வேறுசிலர்
அப் புதுநீரின்கண் தாம் கொணர்ந்த பொன்னாற்செய்த நத்தை நண்டு
காலினையுடைய இறவு வலியமைந்த வாளை என்பனவற்றைவிட்டு,
விளைக பொலிக என்பார் - நாடு விளைவதாக உலகம் பொலிவதாக
என்று வாழ்த்தாநிற்பர்;

      (வி-ம்.) பூப்பால் - பூத்தொழிலைத் தன்பாலுடைய என்க. சூழ்ப்ப
- சுற்ற. பங்கம் - சேறு: சேறாக்கப்பட்ட அகிற்சாந்து என்க. பளிதம் -
கருப்பூரம். மறுகுபட - ஒன்றுகூட. அறை - அம்மி. புரை - குற்றம்.
அவி - கடவுட்கிடும் பலிப்பொருள். அழலென - தீயினது நிறம் பெறும்படி.

      நத்து - நத்தை. நள்ளி - நண்டு. இறவு - இறாமீன். இது
காலுடைய மீனாகலின் 'நடை இறவு' என்றார். நடை: ஆகுபெயர்.
வய - வலிமை. வித்தி - விதைத்து; போகட்டு என்றபடி. அலை:
ஆகுபெயர்; நீர் விளைக பொலிக என வாழ்த்துதல் ஒரு மரபு.
இதனை, சீவகசிந்தாமணியில்