பக்கம் எண் :

பரிபாடல்- வையை171

ஆம் செய்யுளில் நச்சினார்க்கினியர் "விளைக பொலிக ஒருவழக்கு
என்பாருமுளர்" என எழுதிய உரையானும் உணர்க.

      (பரிமே.) 84. அம்மிக்குழம்பிற்கு உவமையானது அவியமர்
குண்டத்தின்மீது தோன்றுகின்ற அழலாகலின் 'அவியமரழல்' என்றார்.

87-99: இல்லது . . . . . . . . .புனல்

      (இ-ள்.) இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் - வேறு சிலர்
இரப்போருடைய வறுமையை அவர்தம் மெய்ப்பாட்டாலேயே உணர்ந்து
அவர் ஈமின் எனத் தம்மை இரந்து கூறுதற்கு முன்பே, நல்லது வெஃகி
- அறத்தையே விரும்பி, வினை செய்வார் - அவர்க்கு வேண்டுவன
ஈதலைச் செய்யாநிற்பர், மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு
ஆர்ப்ப - வேறு சிலர் கழுவுதலுற்ற நீலமணி போன்ற நிறமுடைய
வளைந்த தமது மயிர்க் கற்றைமேல் மொய்த்துள்ள வண்டுகள்
இடம்பெறாமல் எழுந்து ஆரவாரஞ் செய்யும்படி, தண் அம் துவர்
பல ஊட்டிச் சலம் குடைவார் - அக் கற்றையின்மேல் குளிர்ந்த அழகிய
பத்துவகைத் துவர்களையும் தேய்த்துக் கொண்டு நீரின்கண் முழுகா
நிற்பார், எண்ணெய் கழல இழை துகள் பிசைவார் - வேறு சிலர்
தந்தலையில் எண்ணெயை இட்டு அவ் வெண்ணெய் நீங்கும்படி
நுண்ணிய அரைப்புப்பொடியை இட்டுப் பிசையா நிற்பார்,
கோலங்கொள மாலையும் சாந்தும் மதமும் இழைகளும் நீர்க்குக்
கூட்டுவார் - வேறுசிலர் அப் புதுநீர் ஒப்பனை பெறும் பொருட்டு
மலர்மாலைகளையும் சந்தன முதலியவற்றின் குழம்புகளையும்
கத்தூரியினையும் அணிகலன்களையும் அந் நீரின்கண் இடா நிற்பர்,
அப் புனல் உண்ணாநறவினை ஊட்டுவார் - வேறுசிலர் அந் நீர்
உண்ண மாட்டாத தேறலையும் அதன்கட் பெய்யுமாற்றால் அதனை
உண்ணச்செய்யா நிற்பார், ஒள் தொடியார் - இவ்வாறாக நீர்
விளையாட்டயர்ந்த ஒள்ளிய வளையலை யுடைய அம் மகளிருடைய,
வண்ணம் தெளிர முகமும் வளர்முலைக் கண்ணும் கழியச் சிவந்தன
நிறம் - நீராட்டானே மேலும் ஒளி பெறாநிற்ப அவருடைய முகமும்
முலைக்கண்களும் நீரானே புடையுண்டு மிகச் சிவந்தன, அன்னவகை
ஆட்டயர்ந்து பின்னும் புனல் மலர்க்கண் - அத் தன்மையவாகிய
நீராடலைத் தங்காதலரோடு ஆடியிருந்தேயும் பின்னரும் அந் நீரினை
ஆடல் விருப்பானே நோக்காநிற்கும் அம் மகளிருடைய மலரை ஒத்த
கண்கள், அரிபடு விரை மாண் ஐ பகழி அரம்தின் வாய்போன்ம்
போன்ம் போன்ம் - வண்டு மொய்க்கின்ற மணத்தானே மாட்சிமைப்பட்ட
ஐந்தாகிய காமபாணத்தினது அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட வாயையே
பெரிதும் ஒப்பனவாயின;