பக்கம் எண் :

பரிபாடல்- வையை172

      (வி-ம்.) இளிவரவு - இழிவு; என்றது, ஈயென இரத்தலை. "ஈயென
விரத்தல் இழிந்தன்று" (புறநா - 204) எனவும் "ஆவிற்கு நீரென்றிரப்பினும்
நாவிற், கிரவின் இளிவந்தது இல்" (குறள் 1066) எனவும், பிற சான்றோரும்
ஓதுதலுணர்க.

      "இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் . . . .வினை செய்வார்"
என்னுமிதனோடு,

"இலனென்னும் எவ்வம் உரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள"
(223)
என்னுந் திருக்குறளை ஒப்பு நோக்குக.
'நல்லது வெஃகி வினை செய்வார்" என்னு மிதனோடு,

"இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகன் ஆயலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப்பட் டன்று அவன் கைவண் மையே"
(134)
எனவரும் புறச் செய்யுளையும்,
"பேணி யாடும் பெரும்புனல் விழவினுள்
நாணிச் செல்லா நல்குர வுடையோர்க்கு
அரும்பொறி அணிகலம் ஆரப் பெய்த
பெரும்பொறிப் பேழை இவையெனக் கூறிக்
கறைவாய் முரசம் கண்ணதிர்ந் தியம்ப
அறையவும் கொள்ளும் குறைவில ராகித்
துறைதுறை தோறும் இறைகொண் டோருள்
அணியா தோரை ஆராய்ந் துழிதரும்
பணியா வேந்தன் பணிநரைக் காண்மின்"(140: 236-44)

எனவரும் பெருங்கதைப் பகுதியினையும் நினைவு கூர்க.

      நல்லது - நன்னெறி. வினை - அறவினை. மண் - மண்ணுதல்:
கழுவுதல். மணி - நீலமணி. குரல் - கொத்து; கற்றை. வணர் - வளைவு;
நெறிப்புமாம். பலதுவர் - பத்துவகைத் துவர்; அவையாவன:- "பூவந்தி
திரிபலை புணர்கருங் காலி நாவலொடு நாற்பான் மரமே" என்பன.

      இழைதுகள் - நுண்ணிய பொடி, அஃதாவது அரைப்புத்தூள்.
சாந்து - சந்தனக்குழம்பு முதலியன. மதம் - கத்தூரி. இழை - அணிகலன்.
தெளிர - ஒளிபெற. கழிய - மிகுதியாக. மதவேளுக்கு ஐந்து மலர்
அம்புகள் உண்மையின் 'ஐமாண் பகழி' என்றார். அரந்தின் வாய் -
அரத்தானே அராவப்பட்ட வாய். அரத்தானே அராவப்படும் மலரம்பு
இல்லாமையின் இஃது தொழில்பற்றிவந்த இல்பொருள் உவமை என்பர்
ஆசிரியர் பரிமேலழகர்.

      போன்ம் போன்ம் என்னும் அடுக்கு பெரிதும் ஒத்தது என,
துணிவு மிகுதி பற்றி வந்தது.