என்பது வரைவுமலிந்த தோழி கன்னிப்பருவத்துத் தைந்நீர் ஆடத்
தவம் தலைப்பட்டேமென வையையை நோக்கித் தலைமகன் கேட்பச்
சொல்லியது.
ஆசிரியர் நல்லந்துவனார் பாட்டு; நாகனார் இசை;
பண்ணுப் பாலையாழ்.
உரை
1-15: விரிகதிர் . . . . . . . . . . .வையைப் புனல்
(இ-ள்.) வியல் விசும்பு விரிகதிர் மதியமொடு புணர்ப்ப
- அகன்ற
வானத்தின்கண் பரவாநின்ற ஒளியையுடைய திங்களோடு
கூட்டப்படுவனவாகிய, எரிசடை எழில்வேழம் தலை எனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த - கார்த்திகையும் திருவாதிரையும் பரணியுமாகிய
நாள்கள் முதலாக இவற்றது பெயரான் இடபவீதி மிதுனவீதி மேடவீதி
என வேறுபடுத்தோதப்பட்ட, மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் - அம்
மூவகை வீதியுள்ளும், ஓரொன்று ஒன்பது நாள்களைக்கொண்ட மூவகை
இராசிகளுள், உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர - நிறமிக்க
வெள்ளிக்கோள் வந்து இடபராசியைச் சேராநிற்ப, படிமகன் வருடையை
வாய்ப்ப - செவ்வாய்க்கோள் மேடராசியைச் சேரா நிற்ப, பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்த - பொருள்களை ஆராய்ந்தறிகின்ற புந்தி
என்னும் பெயரையுடைய புதன் மிதுன ராசியிலே நிற்க, அங்கி உயர்
நிற்ப புலர் விடியல் - கார்த்திகை நாள் உச்சமாக இருள் புலருகின்ற
விடியல் உண்டாக, அந்தணன் பங்குவின் துணையில்லத்துக்கு உப்பால்
எய்த - வியாழக்கோள் சனியின் இரட்டை இல்லங்களாகிய
மகரகும்பங்களுக்கு மேலே உள்ள மீனராசியைச் சேராநிற்ப, யமன் இறை
வில்லின் கடை மகரம் மேவ - இயமனைத் தமையனாகவுடைய
சனிக்கோள் தனுராசியின் பின்னாகிய மகரராசியிலே நிற்க, மதிய மறையப்
பாம்பு ஒல்லை வருநாளில் - இராகு மதி மறையும் படி வரும்நாளிலே,
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுனம் அடைய - அகத்தியன்
என்னும் மீன் உயர்ந்த தன் இடத்தைக் கடந்து மிதுனராசியைச்
சேராநிற்ப, விரிகதிர் வேனில் எதிர்வரவு மாரி இயைக என
இவ் வாற்றால் - முறுகின வெயிலையுடைய முதுவேனிற் பருவத்துப்
பின்வரும் கார்காலத்திலே மழை பெய்க என்ற இவ் விதிவழியாலே,
புரை கெழு சையம் பொழி மழை தாழ - உயர்ந்த சையமலைக்கண்
பொழியாநின்ற மழை மிகாநிற்ப, வையைப் புனல் நெரிதரூஉம் - |