பக்கம் எண் :

பரிபாடல்- வையை186

      ஆராய்ந்து அறுதியிட்டுக் கூறியுள்ளனர். இம்முடிவே இப்பொழுது
பலரானும் ஒப்ப முடிந்தது.

      உரு - நிறம். ஏற்றியல் - இடபம். வருடை - மேடம்; ஆடு படி
மகன் - செவ்வாய். புந்தி - புதன். புந்தி என்பதற்கேற்பப் 'பொருள்தெரி
புந்தி எனப்பட்டது. அங்கி - கார்த்திகை. உயர்நிற்ப - உச்சமாக.
அந்தணன் - வியாழன். பங்கு - சனி. துணையில்லம் என மாறுக;
இரட்டை வீடு என்றவாறு. அவை மகர கும்பங்கள். இவற்றிற்கு உப்பால்
என்றது மேலுள்ள மீனத்தை. யமன்இறை என மாறுக. யமனாகிய
தமையினையுடைய சனி என்க. வில் - தனுர் இராசி. அதன் கடையாவது
மகரராசி. பாம்பு - இராகு மதி மறைய வரும் நாள் என்றது
சந்திரகிரகணம் உண்டாகும்படி வரும் நாள் என்றவாறு. 'பொதியின்
முனிவன்' என்றது அகத்தியமீனை. புரை வரை - உயர்ந்த இடம். கீறி
- கடந்து.

      மேற்கூறியவாறு கோள்நிற்கக் கார்த் தொடக்கத்தே மழைமிகும்
எனச் சோதிடநூலோர் வகுத்த விதிவழியாலே சையமலையில்
மழைமிக்கது என்க.

      விரிகதிர் வேனில் - வெயில்முறுகின முதுவேனில். மாரி -
கார்ப்பருவம். வையைப்புனல் பெருகிக் கரையை நெறிக்கும் என்க.

      (பரிமே.) 1. மேலவாய நாண் மீன்களைக் கீழாகிய மதி
புணர்தலாவது:- அவ்வநேர் நிற்றன் மாத்திரமாகலின், அவற்றை 'விசும்பு
புணர்ப்ப' என்றார்.

      "இவைமுதலாக இவற்றின் கீழ் இருத்தலாவது இவற்றது பெயரான்
இடபவீதி மிதுனவீதி மேடவீதி என வகுக்கப்பட்டு அம் மூவகை
வீதியுள்ளும் அடங்குதல். அவற்றுள் இடபவீதி: கன்னி துலாம் மீனம்
மேடம் என்பன. மிதுனவீதி தேள் வில்லு மகரம் கும்பம் என்பன.
மேடவீதி இடபம் மிதுனம் கற்கடகம் சிங்கம் என்பன. ஓரிராசியாவது
இரண்டே கால் நாளாகலின், நன்னான்கிராசியாகிய இவை ஓரொன்று
ஒன்பது நாளாயின. கோட்களுக்கு இடனாகலான் இவை பன்னிரண்டும்
'இருக்கை' எனப்பட்டன.

      6-7: ஆதித்தன் சீயத்தையடைய என்பார் 'புலர் விடியல் அங்கி
உயர் நிற்ப' என்றார்.

      9-10: 'பாம்பு மதியமறைய ஒல்லைவருநாள்' என்றது அவ்வாவணி
மாதத்து மதிநிறை நாளாகிய அவிட்டத்தை. எனவே மதியும் இராகுவும்
மகரத்து நிற்க என்பதூஉம், கேது அதற்கு ஏழாமிடமாகிய கற்கடகத்து
நிற்க என்பதூஉம் பெறப்பட்டன.

      இதனாற் சொல்லியது ஆவணித்திங்கள் அவிட்டநாளின்
இக்கோள்கள் தமக்குரிய நிலமாகிய இவ்விராசிகளில் நிற்பச் சோமனை
அரவு தீண்ட என்பதாயிற்று.

      11-12: அகத்தியன் என்னும் மீன் உயர்ந்த தன்னிடத்தைக் கடந்து
மிதுனத்தைப் பொருந்த, பொதியிலை விட்டெனவும் தோன்ற நின்றது.