பக்கம் எண் :

பரிபாடல்- வையை200

இளமையை இத்தைந்நீர்த்தவம் தர யாம் செல்வத்தோடும் சுற்றத்தோடும்
நிலைபெறும்படி அருள்க என்று வேண்டிக் கொள்வாரும் ஆக;

      (வி-ம்.) தக்காய் - நற்பண்புடைமையாலே தகுதியுடையாய்.
என்மார் - என்பார். கழுத்தமை கை - கழுத்தைச் சுற்றிய கை. புல்ல -
தழுவ. விழுத்தகை - வீறு; அஃதாவது மற்றொன்றிற்கு இல்லாத அழகு.
அரி - வண்டு; மலரோரன்னர் மகளிர் வண்டோரனையர் மைந்தராகலின்.
'பூவீழ் அரியின் போகாது' என்றார். புலம்ப - யாம் தனித்து வருந்தும்படி
விட்டு என்க. இதனால் எங்கணவர் எம்மை நீத்துப் பரத்தையிற்குப்
போகாமலிருக்க என்று வேண்டினராதல் பூவீழ் அரியின் என்னும்
உவமையாற் பெற்றாம். வீழ்வார் - விரும்பப் பட்டார் என்க.

      கிழவர் கிழவியர் - முதிய பருவத்தினர். ஏழ் - ஏழாம் பருவம்;
அஃதாவது பேரிளம்பெண். ஏழு பருவமாவன. பேதை பெதும்பை மங்கை
மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் என்பன.
இங்ஙனம் வேண்டுவார் மங்கைப் பருவமகளிர் ஆகலான், யாம் எப்பொழுதும்
இப் பருவத்திற்குரிய இளமையுடையராக என வேண்டினர் என்றவாறு.

      மல்லல்கேள்: உம்மைத்தொகை: மல்லலும் கேளும் என்க. மல்லல்
- செல்வம். கேள் - சுற்றம்.

      வேண்டுதும், எய்துக, மன்னுக இங்ஙனமாமாறு அருள்க என்ற
படியாம்.

      மழவு - இளமை; ஈன்று என்பதனை ஈனவெனத் திரித்துக் கொள்க.

      (பரிமே.) ஆக என்பது வருவிக்கப்பட்டது.

      இனி ஒருவன் உவந்தவை காட்டல் கூறுகின்றாள்.

122 - 132: கண்டார்க்கு . . . . . . . எனவாங்கு

      (இ-ள்.) கண்டார்க்கு இக் காரிகை தாக்கணங்கு காண்மின் -
இப் பெண் தன்னைக் கண்டவரைத் தீண்டிவருத்தும் தெய்வமாவாள்,
ஆதலால் அத்தகையவளை நீயிரும் காண்மின், உவள்கண் காமன்
பண்டாரம் படை காண்மின் - இவளுடைய கண் மதவேளுடைய
கருவூலமும் படைக்கலங்களும் ஆகும் அவற்றின் அழகையும் பார்மின்,
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது - நீல நிறத்தையுடைய
தேனெய் தங்கிய மலர்மாலையையுடைய அம் மகளிர் ஓச்சித்
தடைசெய்யவும் நில்லாமல், பூ ஊது வண்டினம் யாழ்கொண்ட கொளை
கேண்மின் - அம் மாலையில் தேன் ஊதாநின்ற வண்டுகள்
யாழை ஒத்தற்குக் காரணமான அவற்றின் பாட்டைக் கேண்மின்,
கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல் - பாடலின்