பக்கம் எண் :

பரிபாடல்- வையை201

பொருள் விளங்கும்படி பாடாதிருக்கவேயும், குரல் கொண்ட கிளைக்கு
உற்ற உழை கேழ் கெழு சுரும்பின் பாலையிசை ஓர் மின் -
குரல்கொண்ட கிளையாகிய இளிக்குக் கிளையாகப் பொருந்தின
உழைகுரலான நிறம்பொருந்தின வண்டினது அரும்பாலையிற் றோன்றிய
மருதப்பண்ணாகிய இசையைக் கேண்மின், பண்கண்டு திறன் எய்தாப்
பண் - விளரிப்பாலையிற் றோன்றும் யாம் யாழினை, தாளம்பெற -
தாளத்தொடு பொருந்தப் பாடி, கொண்ட இன் இசைத்தாளம் -
மேற்கொண்ட அத் தாளத்திற்கும் கொளைச் சீர்க்கும் அப் பண்ணினது
சீருக்கும், விரித்து ஆடும் தண் தும்பி இனம் காண்மின் - ஏற்பத் தம்
சிறகுகளை விரித்து ஆடாநின்ற குளிர்ந்த இசையினையுடைய
தும்பித்திரளினைக் காண்மின், ஒரு தும்பி - தான் வீழ் பூ நெரித்தாளை.
முனைகெழு சின நெஞ்சின்முன் எறிந்து பின்னும் கனைவரல் காய்சினத்து
இயல் காண்மின் என - ஒரு தும்பி தான் படிந்த மலரினை
நெரித்தவளாகிய ஒருத்தியை மாறுபாடு பொருந்தின வெகுளியையுடைய
நெஞ்சுடனே முன்னரும் தாக்கிப் பின்னரும் தாக்குதற்கு விரைந்து
வருதற்குக் காரணமான அதனுடைய சுடுகின்ற வெகுளியின் இயல்பினைக்
காண்மின் என்று இவ்வாறு அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மைந்தர்
ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டாநிற்ப;

      (வி-ம்.) தாக்கணங்கு - தீண்டிவருத்தும் தெய்வம்; கண்டார்
வருந்துதல் ஒருதலையாகலின் இவள் கண்டார்க்குத் தாக்கணங்கு
என்றான். பண்டாரம் - கருவூலம். காமன் மயக்குதற்குரிய அழகெல்லாம்
அவள்பால் நிரம்பி இருத்தலின் காமன் செல்வமான அழகு குவிக்கப்பட்ட
கருவூலமாக இவளிருக்கின்றாள் என்றான். படை - சேனை;
படைக்கலமுமாம். அவை வில் அம்பு முதலியன என்க.
சேய்மையினுமின்றி அண்மையினுமின்றி இடைநின்றாளை உவள் என்று
சுட்டினான். நீல் - நீலம் என்பது ஈறுகெட்டு நின்றது. நீலநிற நெய்
என்றது விளைந்து முதிர்ந்த தேனினை; இது நீலநிற முடைத்தாதலையும்
இதனை ஒரி என்று வழங்குதலையும், "நீனிற வோரி பாய்ந்தென" (524-5.)
என வரும் மலைபடுகடாத்தானும் உணர்க. யாழ் கொண்ட - யாழை
ஒத்தற்குக் காரணமாகிய என்க. கொளை - பாட்டு வண்டினது பாடல்
பண்ணிற்குரிய பொருளறிந்து பாடப் படாதாகவும் என்பான்.
கொளைப்பொருள் தெரிதரக் கொளுத்தாமல் என்றான். குரல், இளி உழை
என்பன இசைவகைகள். கிளை இடமுறையால் ஐந்தாவதாகிய நரம்பு.
இணை நரம்பு, கிளைநரம்பு, பகை நரம்பு, நட்பு நரம்பு என்று நரம்புகள்
நால்வகைப்படும். குரல் தாரம் விளரி இளி உழை என எண்ணுமுறையால்
குரல் நரம்பிற்கு உழை நரம்பு ஐந்தாவதாதலின் குரலுக்கு உழை கிளை
நரம்பாயிற்று.

      இனி, கிளை என்பது ஐந்து நரம்பு என்பாருமுளர்; விளரி, "கிளை
யெனப் படுவ கிளக்குங் காலைக் குரலே இளியே துத்தம் விளரி,
கைக்கிளை என ஐந்தாகும்" (சிலப் 8: 33-4 உரை) என்பவாகலின். கேழ்
கெழு சுரும்பின் என மாறுக.