பாலையிசை - அரும்பாலையிற்
றோன்றிய மருதப்பண்: ஆகுபெயர்.
பண்கண்டு திறன் எய்தாப்பண் என்றது பண்மட்டும்
பெற்றுத்
திறம் பெறாத பண் என்றவாறு. திறம் - குறைநரம்பு. அஃதாவது
விளரிப்பாலையிற் றோன்றும் யாமயாழ், அதனைத் தாளத்தோடு பாடி
என்க. தாளத்திற்கும் சீர்க்கும் ஏற்ப விரித்தாடும் என்க. தாளத்திற்கும்
சீர்க்கும் உள்ள வேற்றுமை முற்கூறப்பட்டது. தண்தும்பி - குளிர்ந்த
இசையையுடைய தும்பி என்க. முனை - மாறுபாடு. கனைவரல் -
விரைந்து வருதல்.
(பரிமே.) இங்ஙனம் தைந்நீராடல் கூறி மேல் தலைமகன்
கேட்ப
வையையை நோக்கிக் கூறுகின்றாள்.
134-140: இன்னபண்பின் . . . . . . நிறையே
(இ-ள்.) இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்
நறு நீர்
வையை - இனிய தன்மையில் மேம்பாடுற்ற தேர்ச்சியினையுடைய
இசையோடுகூடிய பரிபாடலாலே வாழ்த்தப்படுகின்ற நறிய நீரினையுடைய
வையையே! , மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட கன்னிமை
கனியாக் கைக்கிளைக் காமம் - மின்னுகின்ற அணிகலன்களையும் நறிய
நுதலையும் உடைய மகட்டன்மை மேம்பட்ட கன்னிமைத்தன்மை முதிராத
மகளிரிடத்தே மேற்கூறியவாறு கைக்கிளைக் காமத்தைத் தருகின்ற,
முன்முறை செய்தவத்தின் இம்முறை இயைந்தேம் - யாங்கள்
முற்பிறப்பிலே செய்த தவத்தாலே இப்பிறப்பிலே நின்பால் இத்
தைந்நீராடலாகிய தவத்தைப் பெற்றேம், நயத்தகு நிறை மறுமுறை
அமையத்தும் இயைக அத் தவத்தினை யாவரும் விரும்பத்தக்க நினது நீர்
நிறைவின்கண்ணே மறுப்பிறப்பினும் யாங்கள் பெறுவேமாக;
(வி-ம்.) மின்னிழை - மின்னுகின்ற அணிகலன். மகள்
- மகளாந்
தன்மை; பெண்டன்மை என்க. 'கன்னிமை முதிராக் கைக்கிளைக் காமம்'
என்றது. முன்னர்க் காமஞ்சாலா இளமையோராகிய கன்னிமகளிரின்
அழகிலீடுபட்டு ஏமஞ்சாலா இடும்பை எய்திச் சொல்லெதிர்பெறாது
கண்டார்க்குத் தாக்கணங்கு இக் காரிகை காண்மின் என்பது முதலாக
மைந்தர் சொல்லி யின்புற்றமையை என்க. என்னை?
"காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றுஇரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே"
(தொல்.அகத்-50)
என்பதோத்தாகலின். |
|
|
|