பக்கம் எண் :

பரிபாடல்- வையை210

ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம் - ஒளி விளங்குகின்ற படப்
பொறியினையும் கண்டார் அஞ்சுதல் பொருந்தியதுமாகிய நாகப்
பாம்பினது பெயரையுடைய அச் சாரலிலுள்ள நாகமரமும், அகரு வழை
ஞெமை ஆரம் இனைய - அகிலும் சுரபுன்னையும் ஞெமைமரமும்
சந்தனமரமும் ஆகிய இவை வருந்தும்படிசெய்து, தகரமும் ஞாழலும்
தாரமும் தாங்கி - தகரமரம் ஞாழல்மரம் தேவதாரமரம் என்னும்
இவையிற்றைச் சாய்த்து ஏந்திக்கொண்டு, வளி வரல் வரவு -
காற்றுப்போல விரைந்து வருகின்ற வருகை, நளிகடல் முன்னியது போலும்
- ஒரு பெருங்கடல் பொங்கி வருவதனை ஒக்கும்;

      (வி-ம்.) வையையின்கண் நீர்வரவு கடல் கிளர்ந்து வருவதனை
ஒக்கும் என்க. வளி - காற்று. மின்னலையும் இருளையும் மாறிமாறிப்
பரப்பி என்க. கிளை என்பதனை மலைக்கேற்றி, பக்க மலைகளோடே
சையமலையை முற்றி எனினுமாம். விளிவு இன்று - இடைவிடாது. தளி
- மழை. ததர் - சிதறிய. தாஅய் - பரவ. நாகம் - ஒருவகை மரம்:
பாம்பின் பெயராகலின் அப் பாம்பிற்கியைந்த ஒளிகெழு உத்தி உருகெழு
என்னும் அடைமொழிகள் புணர்க்கப்பட்டன. இதுபற்றிப் பரிமேலழகர்
தரும் விளக்கத்தைக் கீழே காண்க.

      உத்தி - படப்பொறி. உரு - அச்சம். அகரு - அகில். வழை -
சுரபுன்னை: ஞெமை தகரம் ஞாழல் என்பன மரப்பெயர்கள். ஆரம் -
சந்தனமரம். தாரம் - தேவதாரமரம். இம் மரங்களில் சில வருந்தும்படி
சிலவற்றை ஏந்திவந்தது என்பதன்கண் நயமுணர்க. நளிகடல் - செறிந்த
கடலுமாம். முன்னியது - வந்தது.

      (பரிமே.) 4. "நெட்டிலை வஞ்சிக்கோ" (பழம்பாடல்) என்புழியும்
"புல்லிலை வஞ்சிப் புறமதி லலைக்கும், கல்லென் பொருநை" (புறநா-387)
என்புழியும், மரவிசேடத்திற்குள்ளன அதன் பெயர்த்தாய ஊரின்கண்ணும்,
"திங்கள்வெண் குடையினார்க்குத் திருவிழுக்குற்ற வண்ணம், பைங்கதிர்
மதியிற் றெள்ளிப் பகர்ந்தெடுத்துரைத்தும்" (சீவக-199) என்புழிச்
சந்திரற்குள்ளது அவன் பெயர்த்தாய அறிவின்கண்ணும்
ஏற்றப்பட்டாற்போல் (பி.ம்) அவ்வூரின்கணு நதிங்க காணொவினகண்ணு
மேற்பட்டாற்பொல) ஒளிதிகழாநின்ற உத்தியினையுடைய அச்சத்தைத்
தருகின்ற நாகமெனப் பாம்பிற்குள்ளது அதன் பெயர்த்தாய மரத்தின்கண்
ஏற்றப்பட்டது.

      8. வளிபோலும் விரைந்த வரவு.

9 - 18: வந்துமதுரை . . . . . . . காழ்கொள்வோரும்

      (இ-ள்.) அம் தண் புனல் வையையாறு வான் மலர் தாஅய் வந்து
மதுரை மதில் பொரூஉம் எனக்கேட்டு - அழகிய குளிர்ந்த நீரையுடைய
வையையாறு மேற்கூறியாங்கு தூயமலர் பரக்கப்பட்டு வந்து மதுரையினது
மதிலை மோதாநின்றது என்று கண்டோர் கூறக்கேட்டு, மின் அவிர்
ஒளியிழை வேயுமோரும் - அந் நகரமாந்தர், மின்னல்போல விளங்கும்
ஒளியை