குதிரையினை ஏறிச் செலுத்துவோரும்,
வேறுசிலர் களிற்று யானை
மிசையேறிச் செலுத்துவோரும், வடி மணி நெடும் தேர் மா முள்
பாய்க்குநரும் - வேறுசிலர் தெளிந்த ஓசையையுடைய மணிகள்
கட்டப்பட்ட நெடிய தேரின்கட் பூட்டிய குதிரைகளை முட்கோலாற்
குத்திச் செலுத்துவோரும் ஆகி, விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி
- விரைந்து விரைந்து மிகமிக நெருங்கிச் செல்லாநிற்ப, வையை நீர்
ஆடல் தலைத் தலைச்சிறப்ப - வையை நீராடல் இடந்தொறும்
இடந்தொறும் சிறக்கும்படியும், கூடல் உரை தர வந்தன்று -
மதுரையிலுள்ள மாந்தரெல்லாம் தன்னைப் புகழவும் வாராநின்றது,
காண்பவர் ஈட்டம் வையைக் கரைதர வந்தன்று - அதனைக் காணவந்த
மக்கட் கூட்டம் வையையின் இருமருங்கும் அதன் கரையை ஒப்ப வந்து
குழுவிற்று, நீத்தம் கரைமேலா நிவந்தது - அந் நீர்வெள்ளம் கரைக்கு
மேலே உயர்ந்தது, காண்பவர் காதல் நீத்தம் கவர்ந்தது போலும் - அது
தன்னைக் காணவந்த மக்களின் ஆசைவெள்ளத்தையும் கவர்ந்துகொண்டு
பெருகியதுபோலப் பெருகிற்று, துறை முன் நிறை அணிநின்றவர் மொழி
மொழி - அப்பொழுது அவ் வையையின்கண் நீராடுந் துறையின்முன்
நிறைந்த அணி அணியாக நின்ற மாந்தர் மொழிகின்ற மொழிகள்,
ஒன்றல பல பல உடனெழுந்தன்று - ஒன்றை யொன்று ஒவ்வாது பல
பலவாக ஒருகாலத்தெழுந்தன; யார் அவை எல்லாம் தெரியக்
கேட்குநர் - யாரே அம்மொழிகளை எல்லாம் பொருள்விளங்கக் கேட்க
வல்லார், கில்லா - அவை கேட்டல் கூடா, கேட்டன சில சில -
எம்மாற் கேட்கப்பட்டன ஒருசிலவேயாம்;
(வி-ம்.) கடுமா - கடிய நடையையுடைய குதிரை. வடிமணி
-
தெளிந்த ஓசையையுடைய மணி. முள் - முட்கோல். பாய்க்குநர் -
குத்துவோர். இங்ஙனமாக இருபாலாரும் விரைபு விரைபு ஈண்டி என்க.
விரைபு - விரைந்து. ஆடல் - நீராடல். தலைத்தலை -
துறையிடந்தொறும் துறையிடந் தொறும். கூடல் - மதுரையிலுள்ளார்:
ஆகுபெயர். உரை - புகழ். வந்தன்று - வந்தது. கரைதர - கரைபோல.
ஈட்டம் - கூட்டம். நீத்தம் - வெள்ளம். நிவந்தது - உயர்ந்தது;
பெருகிற்று. கரைமேலாக எனற்பாலது ஈறுதொக்கு 'கரைமேலா' என
நின்றது. காண்பவர் காதல் நீத்தம் எனக்கூட்டுக.
காண்பவர் காதல் நீத்தம் கவர்ந்தது போலும் என்னும்
இத்துணையும் பருவவரவும் வையை நீர் வரவும் கூறிற்று.
இனி, அது காணவந்தாருள் முன்னர் வந்து கண்டோர்
பின்னர்
வந்தவர்க்கு அங்குத் தாம் கேட்டவை கூறுகின்றவாற்றானும் கண்டவை
காட்டுகின்றவாற்றானும் விழவணி இன்பம் கூறப்படுகின்றது.
முன்றுறை நிறையணி என்பது முதலாகக் கண்டோர் கூற்று.
துறைமுன் எனற்பாலது முன்றுறை என முன்பின்னாக மாறி நின்ற |
|
|
|