நங்கை நாணாள் கொல் என்மரும்
- அந் நங்கை நாணுடையள்
ஆவளோ என்று கூறுவோரும், கோட்டியுள் கொம்பர் குவிமுலை
நோக்குவோன் - கூட்டத்தின்கண் நின்றே ஒருவன் பூங்கொம்பு ஒப்பா
ளொருத்தியின் குவிந்த முலைகளைக் கூர்ந்து நோக்காநிற்பன், ஓட்டை
மனவன் உரம் இலி என்மரும் - அவள் இள நெஞ்சன்
திண்மையில்லாதவன் என்று இகழ்வாரும், சொரிந்ததூஉம் சொற்றதூஉம்
பற்றாள் - இவள் இவனைப் பண்டு மலர் முதலியன கையுறையாகக்
கொணர்ந்து பொழிந்ததும் காதன்மொழி பேசியதுமாகிய செயல்களானே
அறிந்தாளில்லை அங்ஙனமிருந்தும், நெறிசெல்வான் பின் - வழிமிசைப்
போகின்ற ஏதிலான் ஒருவன் பின்னே, நெஞ்சத்தை நீத்தாள் - தனது
நெஞ்சைப் போக்கி நிறந்திரிந்தாள் - தனது மேனி பசலைபூப்ப நின்றாள்,
அன்புற்றாள் - யாம் காதல் கொண்டவிடத்தும், நிறை அஞ்சி - இங்ஙனம்
நிறையழிதற்கு அஞ்சி, கழியாமோ - அம் மிகுதியினைக் கழிக்கக்
கடவேமல்லமோ, என்மரும் - என்று கூறுவோரும், உவன் இந் நாரிகை
பூணாரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான் - இவன் இம் மடந்தை
பூண்டுள்ள முத்தாரத்தின் அழகினை நோக்குவான் போல இவளுடைய
ஒன்றனொடு ஒன்று நெருங்கிய முலைகளைப் பார்த்தனன், அவனை
நாணாள் என்மரும் - அவன் அங்ஙனம் பார்த்தற்கு இவளும்
நாணுகின்றிலள் என்பாருமாயினார்;
(வி-ம்.) நாணாள்கொல் - நாணுடையள் ஆவளோ. நயனில்
-
நன்மையில்லாத. யாணர் - புதுவருவாய். யாற்றிற்குப் புதுவருவாயாவது
மேலும் மேலும் நீர்வந்து பெருகுதல். சேண - உயர. கணவனிற்சிறந்த
கேளிரின்மையால் கணவனைச் சிறந்தான் என்றார். வெரிந் - முதுகு
நாணுக் குறைவிலள் - நாணுடைமையிற் குறை வில்லாதாள்; குலமகள்
என்றவாறு. நங்கை என்றது, இகழ்ச்சிக் குறிப்பு. கோட்டி - கூட்டம்;
வடசொல். கொம்பர் - பூங்கொம்பு: ஆகுபெயர். அடங்காமல் பொறிவழிப்
போதலால், ஓட்டைமனவன் என்றார். மனவன் - மனத்தையுடையான்.
உரம் - திண்மை.
சொறிந்ததூஉம் என்னும் பாடத்திற்கு எவ்வாற்றாலும்
பொருள்
விளங்கவில்லை. ஆதலின் சொரிந்ததூஉம் எனத் திருத்தப்பட்டது.
சொரிதல் - மலர் முதலியன கொணர்ந்து சொரிதல். சொற்றல் -
சொல்லுதல். முன்னர் எவ்வாற்றானும் அறியப்படாத புதுவோனாகிய
நெறிச்செல்வான் பின் நெஞ்சம் போக்கி நிறந்திரிந்தாள் என்று
வியந்தபடியாம். யாமாயின் இங்ஙனம் நிறையழிதற்கு அஞ்சிக் கழிப்பேம்
என்க.
பூணாரம் - பூணுகின்ற முத்துமாலை. முத்துமாலையின் அழகைக்
காண்பது தலைக்கீடாகப் புணர்முலையை உவன் பார்த்தான்; அங்ஙனம்
பார்த்தற்கு இவளும் நாணுகின்றிலள். நாரிகை - பெண்.
(பரிமே.) என்று கேட்டன கூறி, மேல் உவந்தவை காட்டல்
கூறுகின்றார். |
|
|
|