பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்227

பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்."
(சிலப்.11: 43-51)
எனவரும், சிலப்பதிகாரப் பகுதியினையும்,

"கருமுகில் தாமரைக் காடு பூத்துநீடு
இருசுடர் இருபுறத் தேந்தி . . . . . .
வருவபோல் கலுழன்மேல் வந்துதோன்றினான்"
(கம்ப. திருவவதா-13)
எனவரும் கம்பநாடர் செய்யுளையும் ஒப்புக் காண்க.

கருவி - முகில் இடி முதலிய தொகுதிகள் என்க. பொலம்பூண் -
பொன்னணிகலன்; 'அருவியுருவின் ஆரம்' என்றது முத்துமாலையை
என்க. திருவரை - அழகிய மலை: கையுடனே மார்பினையும்
தொழுவார்க்கு என்க. இவற்றைத் தொழுதலாவது இவற்றின் எழிலை
மனத்தானே நினைந்து நினைந்து அன்பானே நெகிழ்தல் என்க. உரிது -
உரியது. துறக்கம் - ஈண்டு வைகுண்டம். துறக்கமும் என்புழி உம்மை
சிறப்பு. எச்சவும்மை யாவும் கொண்டு இவ் வுலகத்துப் போகம்
உரியனவாதலோடு துறக்கபோகமும் உரித்து எனவும் கூறிக் கொள்க.
என்னை? இறைவனை அன்பானினைந்து தொழுவார்க்கு,
இம்மையின்பமும் மறுமையின்பமும் வீட்டின்பமும் உளவாதல்
ஒருதலையாதலின் என்க. இதனை,
"குலந்தரும் செல்வந் தந்திடும் அடியார்
      படுதுய ராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்
      அருளொடு பெருநில மளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற
      தாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்
      நாராய ணாஎன்னும் நாமம்"
(திருமொழி. 1: 1-9)
எனவரும் அனுபவமுடைய ஆழ்வார் திருமொழியானும் உணர்க.

      (பரிமே.) 7. வாய்த்தலினை என்னும் இரண்டாவது
விகாரத்தால் தொக்கது.

      13. துறக்கமும் என்னும் உம்மை. சிறப்பும்மை.

14 - 25: சுவைமை . . . . . . .கனலும்

      (இ-ள்.) அடுபோர் அண்ணால் - பகைவரைக் கொல்லும் போர்
வென்றியையும் தலைமைத்தன்மையையும் உடைய பெருமானே, சுவைமை
இசைமை தோற்றம் நாற்றம் ஊறு அவையும் நீயே - சுவையும் ஒலியும்
ஒளியும் நாற்றமும் ஊறும் ஆகிய அவ் வைம்புலன்களும் நீயே, அவை
யவை கொள்ளும்