பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்228

கருவியும் நீயே - அப் புனல்களேயன்றி அவற்றை அறிந்து
கொள்ளாநின்ற வாயும் செவியும் கண்ணும் மூக்கும் மெய்யுமாகிய
அறிகருவிகளும் நீயே, யாம் முந்திக் கூறிய ஐந்தனுள்ளும் - எம்மால்
முன்னர்க் கூறப்பட்ட சுவை முதலிய ஐம்புலன்களுள் வைத்து, ஒன்றனில்
போற்றிய விசும்பும் நீயே - முதற்புலனாகிய ஓசையுடைமையாலே
எம்மால் உணரப்பட்ட வானமும் நீயே, இரண்டின் உணரும் வளியும்
நீயே - ஓசையும் ஊறுமாகிய இரண்டு புலன்களும் உடைமையாலே
உணரப்பட்ட காற்றும் நீயே, மூன்றின் உணரும் தீயும் நீயே - ஓசையும்
ஊறும் ஒளியுமாகிய மூன்று புலனானும் உணரப்படுவதாகிய தீயும் நீயே,
நான்கின் உணரும் நீரும் நீயே - ஓசையும் ஊறும் ஒளியும் சுவையும்
ஆகிய நாற்புலனானும் உணரப்படுவதாகிய நீரும் நீயே, ஐந்துடன் முற்றிய
நிலனும் நீயே - ஓசையும் ஊறும் ஒளியும் சுவையும் நாற்றமும் ஆகிய
ஐம்புலனானும் உணரப்படுவதாகிய நிலனும் நீயே, அதனால் மூலமும்
அறனும் முதன்மையின் இகந்த காலமும் விசும்பும் காற்றொடு கனலும்
மூவேழுலகமும் நின்மருங்கின்று - இங்ஙனம் ஆதலானே மூலப்பகுதியும்
அறமும் அநாதியான காலமும் வானமும் காற்றோடு தீயும் நீரும் நிலனும்
கூடிய இம் மூவேழுலகத்து உயிர்கள் எல்லாம் யாண்டிருந்தும்
நின்னிடத்தனவே யாயின;

      (வி-ம்.) ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம் என வைத்தலே
முறையாயினும் சுவைமை யிசைமை தோற்றம் நாற்றம் ஊறு எனச்
செய்யுளாதலின் முறை பிறழவைத்தார் இறைவனே பூத
முதலியனவாய்ப் பரிணமிப்பன் என்பது வைணவர் கொள்கை. இதனை,

"மாயையாய் உயிராய் மாயா காரிய மாகி மன்னி
மாயையாற் பந்தம் செய்து வாங்கிடும் அவனா லன்றி
மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை
மாயைபோம் போனால் மாயன் வைகுண்டம் வைப்ப னன்றே"
(சிவ - சித்தி - பாஞ்ச - மதம்: 7)

என்பதனான் உணர்க.

      இசைமை - ஓசை. தோற்றம் - ஒளி. கொள்ளும் கருவி - அறியும்
கருவி. அவை மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகள் என்க.
போற்றிய - உணரப்பட்ட. ஒன்று - ஓசை: முதற்பூதத்தின் குணமாதலின்
ஒன்று எனப்பட்டது வளி - காற்று.

      அதனால், மூலப்பகுதி முதல் நிலம் ஈறாகவுள்ள தத்துவங்கள்
எல்லாம் நீயேயாயிருத்தலால், மூவேழுலகமும் என்றது ஆகுபெயரான்
அவற்றில் உள்ள உயிர்களைக் குறித்து நின்றது.

      மூலம் - மூலப்பகுதி. அறம் - நல்வினை: நல்வினை கூறவே
தீவினையும் அடங்கிற்று. முதன்மை - ஆதி: ஆதியில்லாத (அநாதி)
காலம் என்பார் 'முதன்மையின் இகந்த காலம்' என்றார். விசும்பொடு
காற்றும் கனலும் கூறவே இனம்பற்றி எஞ்சிய நீரும் நிலனும் கொள்க.